ஆவின் பச்சை பால் நிறுத்தப்படுமா? நிர்வாகம் விளக்கம்

தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் விவசாயிகளிடமிருந்து பாலை கொள்முதல் செய்து, பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு விநியோகித்து வருகிறது. ஆவின் பால் பொதுவாக ப்ளூ, பச்சை, ஆரஞ்சு மற்றும் ஊதா நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் அதிக கொழுப்புச் சத்து கொண்ட பால் ஆரஞ்சு நிற பாக்கெட்டில் விற்கப்படுகிறது. இதன் விலை மற்ற வகைகளை விட சற்று அதிகமாகும். அதே சமயம், அரை லிட்டர் ரூ.20 விலையில் கிடைக்கும் ப்ளூ பால் குறைந்த கொழுப்புச் சத்து கொண்டதாகும்.

தமிழ்நாட்டில் அதிக மானியத்தில் விற்பனை செய்யப்படும் பால் வகை ஆவின் பச்சை நிற “Green Magic” பால் ஆகும். 4.5 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்ட இந்த பால் அரை லிட்டர் ரூ.22 என்ற விலையில் கிடைப்பதால், பெரும்பாலான மக்கள் இதையே வாங்கி பயன்படுத்துகின்றனர்.

ஆனால், இந்த பால் விற்பனையால் ஏற்படும் நிதிச் சுமை காரணமாக ஆவின் நிறுவனம் பச்சை பால் விநியோகத்தை குறைத்து வருவதாகவும், விரைவில் அதன் விற்பனையை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இந்த தகவல்கள் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தின. ஏனெனில் பச்சை பால் கிடைக்காவிட்டால், மக்கள் ப்ளூ பாலை அதிக அளவில் வாங்க வேண்டிய நிலை அல்லது கூடுதல் விலை கொடுத்து ஆரஞ்சு பாலை வாங்க வேண்டிய சூழல் உருவாகும் என்ற அச்சம் நிலவியது.

இந்நிலையில், ஆவின் நிர்வாகம் இந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், பச்சை நிற “Green Magic” பால் விநியோகம் நிறுத்தப்படவில்லை என்றும், எந்தவொரு பால் வகையின் விநியோகமும் குறைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோரின் தேவைக்கேற்ப அனைத்து வகை பாலும் வழக்கம்போல் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருவதாக ஆவின் உறுதி அளித்துள்ளது. எனவே, சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், Green Magic பால் தொடர்ந்து எந்த தடங்கலும் இன்றி கிடைக்கும் என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related News

Latest News