டீ, காஃபி பிரியர்களுக்கு ஷாக்! சர்க்கரை விலை புதிய உச்சம்…

இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் டீ, காஃபி முக்கிய இடம் பிடித்துள்ளது. காலை, மாலை என குறைந்தது இரண்டு முறையாவது டீ அல்லது காஃபி குடிப்பவர்கள் அதிகம். ஆனால், இந்த பானங்களுக்கு சுவை சேர்க்கும் சர்க்கரையின் விலை தற்போது வேகமாக உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, இந்தியாவில் சர்க்கரை விலை கடந்த ஒரு மாதத்தில் சுமார் 10 சதவீதம் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்க்கரை கையிருப்பு குறைந்திருப்பதும், வரவிருக்கும் பண்டிகை காலத்தில் தேவை அதிகரிக்க உள்ளதுமே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் 100 கிலோ சர்க்கரையின் மொத்த விலை 10.2 சதவீதம் உயர்ந்து ரூ.4,716 ஆக அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் இனிப்பு மற்றும் பலகாரங்களுக்கான தேவை அதிகரிக்கும். இதனால் சர்க்கரைக்கான தேவையும் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு பருவத்தில் சர்க்கரை உற்பத்தி எதிர்பார்த்த அளவைவிட குறைந்துள்ள நிலையில், அக்டோபர் 1-ம் தேதி தொடங்கும் புதிய சீசனில் ஆலைகளின் கையிருப்பு சுமார் 3.5 மில்லியன் டன்களாக மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவாகும்.

விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், பதுக்கலைத் தடுக்க டீலர்கள் 4,000 குவிண்டால்களுக்கு மேல் சர்க்கரையை இருப்பு வைக்கக்கூடாது என்றும், 30 நாட்களுக்கு மேல் கையிருப்பு வைத்திருக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.46-ல் இருந்து ரூ.53 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்களை மட்டுமின்றி இனிப்பு, பேக்கரி தொழில்களையும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன் தாக்கமாக இனிப்புகள், பிஸ்கட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Related News

Latest News