இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை மீண்டும் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Centrum Institutional Research வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அடுத்த 4 முதல் 5 மாதங்களுக்குள் ரீசார்ஜ் கட்டணங்கள் 12% முதல் 15% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தால், டெலிகாம் நிறுவனங்களின் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் (ARPU) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோவின் ARPU சுமார் ரூ.218 ஆக உயரும் என்றும், நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
5G சேவைக்கான கட்டமைப்பு முதலீடுகள் பெருமளவில் நிறைவடைந்துள்ள நிலையில், வருவாய் மற்றும் லாபத்தை அதிகரிக்க நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தலாம் என கூறப்படுகிறது. மேலும், டிராய் அறிவித்த 30 நாள் ரீசார்ஜ் திட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப புதிய திட்டங்கள் மாற்றியமைக்கப்படலாம்.
உதாரணமாக, ரூ.300 ரீசார்ஜ் திட்டம் 12% உயர்ந்தால், அதன் விலை ரூ.336 ஆக அதிகரிக்கும். இது ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும்.
