‘WhatsApp’ பயனர்களுக்கு மத்திய அரசு மிகப்பெரிய எச்சரிக்கை! உடனே இதை பண்ணுங்க!

கணினி மற்றும் லேப்டாப்களில் வாட்ஸ்அப் வெப் வசதியைப் பயன்படுத்தும் அரசு அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையமான ஐ4சி (I4C) மிக முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புத் துறை சார்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்களில் பாகிஸ்தான் உளவுத்துறையினர் ரகசியமாக ஊடுருவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அவசர அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை நடத்திய விசாரணையில், பாகிஸ்தானைச் சேர்ந்த உளவாளிகள் போலியான இந்திய செல்போன் எண்களைப் பயன்படுத்தி, தேசியப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, கமாண்டோ பிரிவு மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ ஆகியவற்றுடன் தொடர்புடைய வாட்ஸ்அப் குரூப்களில் இணைந்தது தெரியவந்துள்ளது.

இந்தக் குழுக்களில் எந்தவொரு தகவலையும் பதிவிடாமல், அமைதியான உறுப்பினர்களாக உள்ளே இருந்துகொண்டு, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் முக்கிய உரையாடல்களை அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இதையடுத்து, பாதுகாப்புத் துறை தொடர்பான வாட்ஸ்அப் குரூப்களில் உள்ள அடையாளம் தெரியாத நபர்களை உடனடியாக நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கணினிகளில் வாட்ஸ்அப் வெப் பக்கத்தை லாக்-அவுட் செய்யாமல் அப்படியே விட்டுச் செல்வதால், சைபர் குற்றவாளிகள் அந்தக் கணக்கைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அதிக வாய்ப்புள்ளதாகத் தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் ஆய்வுப் பிரிவு எச்சரித்துள்ளது.

இதன் மூலம் ஹேக்கர்களால் நமது தனிப்பட்ட குறுஞ்செய்திகளைப் படிக்கவும், நம்மைப் போலவே மற்றவர்களுக்குத் தகவல் அனுப்பவும், நமது அடையாளத்தைப் பயன்படுத்திப் பண மோசடி மற்றும் பிஷிங் தாக்குதல்களை நடத்தவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அலுவலகக் கணினிகள் மற்றும் பலர் பயன்படுத்தும் பொதுக் கணினிகளில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், அரசு, நிதி மற்றும் ரகசியத் தகவல்களை அதன் வழியாகப் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத சூழலில் பயன்படுத்த நேர்ந்தால், இன்காக்னிட்டோ எனப்படும் பிரைவேட் பிரவுசிங் முறையைப் பயன்படுத்திவிட்டு, வேலை முடிந்த உடனேயே மறக்காமல் லாக்-அவுட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரவுசிங் சென்டர்கள், ஓட்டல்கள் மற்றும் முன்பின் தெரியாதவர்களின் கணினிகளில் ஒருபோதும் வாட்ஸ்அப் வெப் பக்கத்தைத் திறக்கக் கூடாது என மத்திய அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.

Related News

Latest News