நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை, அதன் பிறகு ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது. குறிப்பாக, கடந்த 10-ஆம் தேதி முதல் தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11,465-க்கும், ஒரு சவரன் ரூ.91,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் தங்கம் வாங்கக் காத்திருந்த நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
விலை குறைந்ததால் நகைகள் வாங்க இதுவே சரியான நேரம் என பலரும் திட்டமிட்டு வந்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. ஒரு கிராமுக்கு ரூ.135-ம், சவரனுக்கு ரூ.1,080-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,600-க்கும், ஒரு சவரன் ரூ.92,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.920 உயர்ந்து ரூ.93,720-க்கும், கிராமுக்கு ரூ.115 அதிகரித்து ரூ.11,715-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கடந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, வெள்ளி விலையில் தொடர்ந்து 4-வது நாளாக எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
