கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் தவெக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. திமுக, அதிமுக, பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பின. மேலும், அதிமுக மற்றும் பாஜக சார்பில் தவெக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
இதற்கிடையே, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியரிடம் இருந்து எந்தப் புகாரும் வரவில்லை என்று தெரிவித்தார். மேலும், தலைமைச் செயலாளருக்கும் இதுதொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என விளக்கமளித்தார்.
இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டு உண்மையா என்பது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் தகவல் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
