திருப்பூர் மாவட்டம் தொழில் நகரமாக விளங்கி வருகிறது. திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அவிநாசி, பெருமாநல்லூர், காங்கேயம், பல்லடம் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், வார விடுமுறை தினமான நேற்று அவிநாசி பகுதியில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், பொழுதுபோக்கிற்காகவும் ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் அவிநாசி பஸ் நிலையத்தில் திரண்டிருந்தனர்.
அப்போது பஸ் நிலையத்தில் நின்றிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் இருவரும் பொதுமக்கள் முன்னிலையில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். இதனைப் பார்த்த வாலிபர் ஒருவர் சண்டையைத் தடுக்க முயன்றும் முடியவில்லை.
தகவலறிந்து வந்த போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில், இருவரும் ஒரே வாலிபரை காதலித்து வந்ததும், அவர் மற்றொரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து ஏற்பட்ட பொறாமையால் தகராறு உருவானதும் தெரியவந்தது.
பின்னர் அந்த வாலிபர் இருவரையும் சமாதானப்படுத்தி தனித்தனி பேருந்துகளில் அனுப்பி வைத்தார். இந்தச் சண்டையைப் பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
