தீபாவளிக்குத் தங்கம் வாங்கியவர்களுக்குப் பேரிடி! இரண்டே வாரத்தில் இவ்வளவு சரிவா?

கடந்த தீபாவளி பண்டிகையின் போது, தங்கம் விலை இனி குறையவே குறையாது என நினைத்து நகை வாங்கியவரா நீங்கள்? அப்படியென்றால் இந்தத் தகவல் உங்களுக்குச் சற்று அதிர்ச்சியைக் கொடுக்கலாம்.

பண்டிகைக் காலத்தில் உச்சத்தில் இருந்த தங்கம் விலை, இந்த நவம்பர் மாதத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கிடுகிடுவெனச் சரிந்திருக்கிறது.

இதனால் தீபாவளிக்கு ஆசை ஆசையாய் நகை மற்றும் தங்க நாணயங்கள் வாங்கியவர்களின் முதலீட்டு மதிப்பு, இப்போது என்னவாக இருக்கிறது என்பதுதான் நகைப் பிரியர்கள் மத்தியில் முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளது.

புள்ளிவிவரப்படி பார்த்தால், கடந்த நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி சமயத்தில், 10 கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 லட்சத்து 31 ஆயிரத்து 600 ரூபாயாக இருந்தது. அதுவே 24 கேரட் சுத்தத் தங்கம் 1 லட்சத்து 43 ஆயிரத்து 570 ரூபாய்க்கு விற்பனையானது.

ஆனால், நவம்பர் 20-ஆம் தேதி நிலவரப்படி, தங்கம் விலை சுமார் 12 புள்ளி 5 சதவீதம் வரை அதிரடியாகக் குறைந்துள்ளது. அதாவது, தற்போது ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 11 ஆயிரத்து 510 ரூபாய்க்கும், 24 கேரட் தங்கம் 12 ஆயிரத்து 557 ரூபாய்க்கும், 18 கேரட் தங்கம் 9 ஆயிரத்து 418 ரூபாய்க்கும் வர்த்தகமாகி வருகிறது.

இந்த திடீர் விலை வீழ்ச்சியால் நமது கையில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு எவ்வளவு குறைந்திருக்கிறது தெரியுமா? உதாரணத்திற்கு, தீபாவளி அன்று நீங்கள் 10 கிராம் ஆபரணத் தங்கத்தை 1 லட்சத்து 31 ஆயிரத்து 600 ரூபாய்க்கு வாங்கியிருந்தால், இன்றைய சந்தை விலையின்படி அதன் மதிப்பு 1 லட்சத்து 15 ஆயிரத்து 100 ரூபாய் மட்டும்தான்.

அதாவது வெறும் இரண்டே வாரத்தில் 16 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பு குறைந்திருக்கிறது. இதுவே 24 கேரட் சுத்தத் தங்கமாக 10 கிராம் வாங்கியிருந்தால், உங்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் வரை மதிப்பு சரிந்திருக்கும்.

குறைந்தபட்சம் 5 கிராம் நகை வாங்கியவர்களுக்குக் கூட சுமார் 8 ஆயிரத்து 250 ரூபாய் வரை விலை வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.

சரி, இதற்காகத் தங்கம் வாங்கியவர்கள் பயப்பட வேண்டுமா என்றால், நிச்சயமாக இல்லை என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். சர்வதேச சந்தை நிலவரம், வட்டி விகிதம் மற்றும் பண மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்துத் தங்கம் விலை ஏறி இறங்குவது மிகவும் இயல்பான ஒன்றுதான்.

மேலும், நகை வாங்கும்போது நாம் கூடுதலாகக் கொடுத்த ஜிஎஸ்டி, செய்கூலி, சேதாரம் ஆகியவை நகையைத் திரும்ப விற்கும்போது நமக்குக் கிடைக்காது.

எனவே, இன்றே நகையை விற்கப் போகிறவர்களுக்கு மட்டுமே இது நஷ்டமே தவிர, தங்கத்தை நீண்ட கால முதலீடாகப் பார்ப்பவர்கள் இந்தத் தற்காலிகச் சரிவைக் கண்டு துளியும் அச்சப்படத் தேவையில்லை.

Related News

Latest News