அமெரிக்காவின் பேட்ரியாட்டிற்கே சவால் விடும் ‘இஸ்ரேல்’! ஈரான் ஏவுகணைகளைத் தடுக்க ‘புதிய ஆயுதம்’?

ஈரான் உடனான போரில் அதிக விலை கொண்ட இடைமறிப்பு ஏவுகணைகளை நம்பியிருந்ததால் ஏற்பட்ட பற்றாக்குறையைச் சமாளிக்க, இஸ்ரேல் இப்போது குறைந்த செலவிலான தனது ‘டேவிட்ஸ் ஸ்லிங்’ (David’s Sling) வான்பாதுகாப்பு அமைப்பை அதிரடியாகத் தரம் உயர்த்தியுள்ளது.

கனரக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அழிக்கும் இந்த அமைப்பின் தாக்கும் தூரம் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளதால், பல வாரங்களுக்குத் தொடர்ந்து நடத்தப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களைக்கூட இஸ்ரேலால் சமாளிக்க முடியும் என அந்நாட்டு விமானப்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் வான்பாதுகாப்புக் கவசத்தில் குறுகிய தூரத்திற்கு அயர்ன் டோம், நடுத்தரத் தூரத்திற்கு டேவிட்ஸ் ஸ்லிங் மற்றும் விண்வெளியிலேயே ஏவுகணைகளை அழிக்கும் ஆரோ-3 ஆகியவை உள்ளன.

இதில் ரபேல் மற்றும் ஆர்டிஎக்ஸ் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய டேவிட்ஸ் ஸ்லிங்கில் பயன்படுத்தப்படும் ‘ஸ்டன்னர்’ ஏவுகணையின் விலை சுமார் பத்து லட்சம் டாலர்கள் மட்டுமே.

இது ஆரோ-3 ஏவுகணையின் விலையில் மூன்றில் ஒரு பங்கும், நான்கு மில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்காவின் பேட்ரியாட் பிஏசி-3 ஏவுகணையை விட நான்கு மடங்கு விலை குறைவானதுமாகும்.

கடந்த 2024 முதல் நடந்த மோதல்களிலும், சமீபத்திய போரிலும் தொண்ணூறு சதவீத ஈரான் ஏவுகணைகள் தடுக்கப்பட்ட போதிலும், சில ஏவுகணைகள் தப்பித்து விழுந்ததில் இருபது பேர் உயிரிழந்து ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

அந்தத் தாக்குதல்களின் போது கிடைத்த தரவுகளை வைத்துச் சில நாட்களிலேயே இந்தத் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் மேம்படுத்தியுள்ளது.

முன்பெல்லாம் விரல் விட்டு எண்ணக்கூடிய ஏவுகணைகளைத் தடுக்கவே பாதுகாப்புக் கவசங்கள் உருவாக்கப்பட்ட நிலையில், இப்போது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை எதிர்கொள்ள மலிவான ஏவுகணைகள் தேவைப்படுவதாகப் பாதுகாப்பு வல்லுநர் உசி ரூபின் தெரிவித்துள்ளார்.

ரபேல் மற்றும் ஆர்டிஎக்ஸ் நிறுவனங்களால் இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளையும், அமெரிக்காவில் இரண்டாயிரத்து ஐநூறு ஏவுகணைகளையும் ஆண்டுதோறும் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் பின்லாந்து மற்றும் கிரீஸ் நாடுகளும் இதை ஆர்டர் செய்துள்ளன.

மறுபுறம் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மாதம் முந்நூற்று ஐம்பது பேட்ரியாட் ஏவுகணைகளைக் கேட்கும் சூழலில், அமெரிக்காவின் ஏவுகணைக்காகக் காத்திருந்தால் 2029-ஆம் ஆண்டு வரை ஆகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஈரானிடம் இன்னும் ஆயிரத்து எழுநூறு ஏவுகணைகள் கையிருப்பில் உள்ளதோடு, மாதம் ஐம்பது புதிய ஏவுகணைகளைத் தயாரித்து வரும் நிலையில், இஸ்ரேலுடன் இணைந்து மீண்டும் தாக்குதல் நடத்தலாமா என அதிபர் டிரம்ப் ஆலோசித்து வருகிறார்.

Related News

Latest News