மின் வாரிய ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்வு!!

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக ஊழியர்களுக்கு வழங்கப்படும் இறப்பு மற்றும் ஓய்வூதியப் பணிக்கொடையின் உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கான அரசின் ஒப்புதல் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதனால் தகுதியுள்ள மின் வாரிய ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கூடுதலாக ரூ.5 லட்சம் வரை பணிக்கொடை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் நிதித்துறை கடந்த 2024 செப்டம்பர் 6ஆம் தேதி வெளியிட்ட அரசாணை எண் 281-ன்படி, அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டது.

இதே சலுகையை மின் வாரிய ஊழியர்களுக்கும் வழங்கக் கோரி, மின் பகிர்மானக் கழகம் கடந்த 2025 நவம்பர் 21ஆம் தேதி அரசுக்கு கடிதம் அனுப்பியது.

இந்தக் கோரிக்கையை ஏற்று, நிதித்துறையின் ஒப்புதலுடன் தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் அனில் மேஷ்ராம், கடந்த நவம்பர் 18ஆம் தேதி வெளியிட்டுள்ளார்.

இந்த உயர்வு 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, அந்தத் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணிக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் இந்தப் பலன் பொருந்தும்.

இருப்பினும், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதனால் மின் வாரிய ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related News

Latest News