ரூ.10,000 அபராதம்! பைக், கார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இருசக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள் மற்றும் லாரிகள் எனச் சாலையில் ஓடும் அனைத்து வாகனங்களுக்கும் ‘பியூசி’ எனப்படும் புகைக் கட்டுப்பாட்டுத் தரச் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாகும்.

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி இந்தச் சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் நிலையில், எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை இந்தப் புகைப் பரிசோதனை சான்றிதழைப் புதுப்பிக்க வேண்டும் என்ற விதிகளில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இப்போது மிக முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

இந்தப் புதிய திருத்தங்களின்படி, பழைய மாடல் வாகனங்களான பிஎஸ்-1(BS-1), பிஎஸ்-2(BS-2) மற்றும் பிஎஸ்-3(BS-3) ரக வாகனங்களுக்குப் புகைச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் மூன்று மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த வாகனங்களை வைத்திருப்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் பரிசோதனை செய்து சான்றிதழ் பெற வேண்டும். அதேபோல பிஎஸ்-4 ரக வாகனங்களுக்கான சான்றிதழ் ஆறு மாதங்களுக்குச் செல்லுபடியாகும்.

இதில் பிஎஸ்-6(BS-6) ரகப் புதிய வாகனங்களை வைத்திருப்பவர்களுக்குப் பெரும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பிஎஸ்-6(BS-6) வாகனங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானதாக இருந்தாலும் ஓராண்டுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் புதிய விதியின்படி, வண்டி பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து அதன் வயது கணக்கிடப்பட்டுப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி தனிநபர் பயன்படுத்தும் பிஎஸ்-6(BS-6) கார் மற்றும் பைக்குகளுக்கு, வாங்கிய முதல் ஆறு ஆண்டுகள் வரை மூன்று வருடங்களுக்கு ஒருமுறை புகைச் சான்றிதழ் பெற்றால் போதுமானது.

வண்டி வாங்கி ஆறு முதல் பத்து ஆண்டுகள் ஆகியிருந்தால் வருடத்திற்கு ஒருமுறையும், பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் சான்றிதழ் பெற வேண்டும்.

அதேநேரம் வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் பிஎஸ்-6(BS-6) டிரான்ஸ்போர்ட் வாகனங்களுக்கு, முதல் ஆறு ஆண்டுகள் வரை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையும், ஆறு முதல் பத்து ஆண்டுகளுக்குள் இருந்தால் ஓராண்டுக்கு ஒருமுறையும், பத்து ஆண்டுகளைக் கடந்திருந்தால் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் சான்றிதழ் புதுப்பிக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே புகைச் சான்றிதழ் பெற்று வைத்திருப்பவர்களுக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள பழைய தேதி முடியும் வரை அது செல்லுபடியாகும் என்றும், அது காலாவதியான பிறகு இந்தப் புதிய விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

Related News

Latest News