ஈரான் ரகசியமாக உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
இது குறித்து வெள்ளிக்கிழமை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய், கடந்த 2003-ஆம் ஆண்டு ஈராக் மீது படையெடுப்பதற்கு முன்பு அமெரிக்கா எந்தப் பொய்யான திரைக்கதையைப் பயன்படுத்தியதோ, அதே பழைய நாடகத்தைத்தான் இப்போதும் அரங்கேற்றி வருவதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
‘ஃபைண்டிங் நீமோ’ திரைப்படத்தில் வரும் ஞாபக மறதி கொண்ட டோரி என்ற மீனைப் போல, உலக நாடுகள் அனைத்தும் பழைய வரலாற்றை மறந்திருக்கும் என அமெரிக்கா நினைப்பதாக அவர் கிண்டலடித்துள்ளார்.
குறிப்பாகக் கடந்த 2003-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அப்போதைய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் காலின் பவல், ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறித் தனது கையில் ஒரு சிறிய பாட்டிலைக் காட்டிய நிகழ்வை பாகேய் நினைவூட்டியுள்ளார்.
நவீன வரலாற்றின் மிகப்பெரிய உளவுத்துறைத் தோல்வி மற்றும் அரசியல் ஏமாற்று வேலைக்கு அடையாளமான அந்தப் பொய்யான தகவலை வைத்துத்தான், மக்கள் ஆதரவைத் திரட்டி ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தது.
அதனால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து உலகம் பாடம் கற்றுக்கொண்டதா அல்லது மீண்டும் ஏமாறப்போகிறதா என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.
முன்னதாக புதன்கிழமை ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அதிபர் டிரம்ப், ஈரான் அணு ஆயுதம் பெறுவதை அமெரிக்கா தடுத்து நிறுத்திவிட்டதால், இப்போது அவர்கள் விஷ வாயுக்கள் மற்றும் உயிரியல் ஆயுதங்களை உருவாக்க முயற்சிப்பதற்கான அறிகுறிகள் தெரிவதாகக் கூறியிருந்தார்.
அமெரிக்காவைத் தாக்கினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்திருந்தார். மேலும் வாஷிங்டனில் உள்ள முக்கிய அதிகாரிகளைக் குறிவைத்து ஈரான் ரசாயனத் தாக்குதல் நடத்தத் திட்டமிடுவதாக சிஎன்என் ஊடகமும் செய்தி வெளியிட்டிருந்தது.
எதிரிகளுக்கு எதிராக ஈரான் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் திட்டமிடுவதாக இஸ்ரேல் அளித்த உளவுத் தகவலை அமெரிக்க அதிகாரிகளில் ஒரு தரப்பினர் தீவிரமாக எடுத்துக்கொண்டாலும், மற்றொரு தரப்பினர் இது 2002-ஆம் ஆண்டு ஈராக் குறித்த தவறான உளவுத் தகவலைப் போல இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தாக்குதல் நோக்கத்திற்காக ஈரான் தொடர்ந்து ரசாயன மற்றும் உயிரியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க உளவுத்துறையின் 2025-ஆம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
