ஈரானால் நம்பர் 1 ராணுவத்திற்கு வந்த சோதனை! ஒப்பனாக ஒத்துக் கொண்ட ‘அமெரிக்கா’?

ஈரான் உடனான போரில் அமெரிக்கக் கடற்படை தனது ஆயுதக் கையிருப்பு தீர்ந்துபோனதால், காலாவதியான ‘டோமஹாக்’ குரூஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக அமெரிக்கக் கடற்படையின் பொறுப்புச் செயலாளர் ஹங் சாவோ நாடாளுமன்றக் குழு முன்பு ஒப்புக்கொண்டிருப்பது உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’ நடவடிக்கையின் போது, பயன்படுத்தத் தகுதியற்றது என ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய ஏவுகணைகளின் கணினி குறியீடுகளை மாற்றி, அவற்றை மீண்டும் போர்க்களத்தில் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

காய்ந்துபோன ரொட்டித் துண்டில் சிறிது தண்ணீர் தெளித்து மைக்ரோவேவ் அவனில் வைத்து மீண்டும் சாப்பிடுவதைப் போலத்தான் இந்தப் பழைய ஏவுகணைகளையும் பயன்படுத்தினோம் என அவர் கூறிய உவமை பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாத அறிக்கைகளின்படி, போர் தொடங்கிய நான்கே வாரங்களில் அமெரிக்கா சுமார் எண்ணூற்று ஐம்பது முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டோமஹாக் ஏவுகணைகளை ஈரான் மீது வீசியுள்ளது.

போருக்கு முன்பு அமெரிக்காவிடம் சுமார் மூவாயிரத்து நூறு ஏவுகணைகள் மட்டுமே இருந்த நிலையில், மூன்றில் ஒரு பங்கு ஒரே மாதத்தில் காலியானது. ஒரு அதிநவீன டோமஹாக் ஏவுகணையின் விலை சுமார் முப்பது கோடி ரூபாய் என்பதோடு, அதைத் தயாரிக்க இரண்டு ஆண்டுகள் வரை ஆகும்.

2026-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் வெறும் ஐம்பத்தேழு ஏவுகணைகளை மட்டுமே கடற்படை கேட்டிருந்த நிலையில், இப்போது உற்பத்தியை மாதம் அறுபதாக உயர்த்தியுள்ளனர்.

பொதுவாக முப்பது ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த ஏவுகணைகளை, பதினைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுமையாகப் பரிசோதித்துப் புதுப்பிக்க வேண்டும்.

ஆனால் முறையான சோதனைகள் இன்றி வெறும் குறியீடுகளை மட்டும் மாற்றி ஏவும்போது, அதன் உள்பாகங்கள் துருப்பிடித்தோ அல்லது ரசாயன மாற்றம் அடைந்தோ இருந்தால் ஏவுகணை வழியிலேயே திசைமாறும் ஆபத்து உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுத மேலாண்மை விதிகள் எச்சரிக்கின்றன.

இதற்கு ஆதாரமாக, முந்தைய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட சில புதுப்பிக்கப்பட்ட டோமஹாக் ஏவுகணைகள் இலக்கைத் தாக்கிய பிறகும் வெடிக்காமல் அப்படியே முழுமையாகக் கிடந்ததாக ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் மிக வலிமையான ராணுவம் எனக் கூறப்படும் அமெரிக்காவே, தான் தயாரிக்கும் வேகத்தை விடப் பல மடங்கு வேகமாக ஆயுதங்களைச் செலவழித்துவிட்டு, இப்போது காலாவதியான ஆயுதங்களை நம்பியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News