தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களைத் தற்காலிகமாக மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு நிரப்ப கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. நிரந்தரப் பணியாளர்கள் நியமிக்கப்படும் வரை, ரேஷன் பொருட்கள் விநியோகம் மற்றும் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்கும் பணிகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தமிழகத்தில் தற்போது 26,618 முழுநேரக் கடைகள், 10,710 பகுதிநேரக் கடைகள் என மொத்தம் 37,328 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் 2.28 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர். இதில் 1,714 விற்பனையாளர்கள், 176 கட்டுநர்கள் என மொத்தம் 1,890 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விற்பனையாளர் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சியும், கட்டுநர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும் அவசியம். சம்பந்தப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஊதியம் மற்றும் தகுதிகள் என்ன?
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தினசரி ரூ.400 ஊதியம் வழங்கப்படும். மாதத்திற்கு விற்பனையாளர்களுக்கு அதிகபட்சம் ரூ.7,500, கட்டுநர்களுக்கு ரூ.6,600 வழங்கப்படும்.
மேலும், இ-பிஓஎஸ் கருவி பயன்பாடு, கைரேகை மற்றும் கருவிழி சரிபார்ப்பு, பொருட்களின் இருப்பைப் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு தகுதியானவர்களைத் தேர்வு செய்யும். இந்தப் பணி தற்காலிகமானது என்பதால், நிரந்தரப் பணி கோர முடியாது என்ற உறுதிமொழியும் அளிக்க வேண்டும். தமிழக மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு இந்த அறிவிப்பு புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
