மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்று சர்வதேச இசை உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேவன் ஏகாம்பரம் இசையமைப்பில், பாடகி சுஷா பாடியுள்ள வருவாய் என்ற பாடல், 2027-ம் ஆண்டுக்கான 69-வது கிராமி விருதின் ‘சிறந்த உலகளாவிய இசைப் படைப்பு’ (Global Music Performance) பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. உலகப் புகழ்பெற்ற பாடகர்களான ஷகிரா, பர்னா பாய், ரோசாலியா உள்ளிட்டோரின் பாடல்களுடன் இது போட்டியிடுகிறது.
இந்தப் பாடலைத் தேர்வு செய்தது குறித்து பாடகி சுஷா கூறுகையில், பாரதியாரின் பல பிரபலமான பாடல்கள் உள்ளன. ஆனால், அவருடைய பாடல் ஒன்றைச் செய்ய வேண்டும் என தேவன் ஏகாம்பரம் கூறியபோது, வழக்கமான பாடலாக இல்லாமல் சற்று வித்தியாசமான ஒன்றைத் தேட விரும்பினேன். பல ஆண்டுகளுக்கு முன்பு என் தாயார் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடல்தான் இது. நேற்று கிராமி பரிந்துரைகள் அறிவிக்கப்படும் நாள் என்பதே என் நினைவில் இல்லை. எனக்கு அது வழக்கமான ஒரு நாளாகத்தான் இருந்தது. திடீரென என் செல்போனில் வாழ்த்துச் செய்திகள் குவியத் தொடங்கியதும், தேவனுக்கு அழைத்து என்னால் நம்பவே முடியவில்லை என்று கூறினேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் தேவன் ஏகாம்பரம் கூறுகையில், கர்நாடக இசையை அனைவரும் ரசிக்கும் வகையில் நவீன இசையுடன் வழங்க விரும்பினேன்.பாரதியார் கண்ணனைப் பற்றி மட்டும் எழுதவில்லை. அவருடைய தமிழ் மொழியின் அழகிற்காகவே அவர் அறியப்பட்டவர். சர்வதேச மேடையில் ஒரு தமிழ்ப் பாடல் ஒலிப்பது பெருமையாக உள்ளது. பாடகி சுஷா இந்தப் பாடலுக்கு அழகான உணர்வைக் கொடுத்துள்ளார். குறிப்பாக, இறுதியில் அவர் பாடும் கண்ணா என்ற பகுதி மனதை நெகிழச் செய்கிறது என்றார்.மொத்தம் 526 பாடல்களில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்திருப்பது எதிர்பாராத மகிழ்ச்சி என்றும் தேவன் தெரிவித்துள்ளார்.இந்தச் சாதனை தமிழ் இசைக்கும், பாரதியாரின் படைப்புகளுக்கும் உலக அரங்கில் கிடைத்துள்ள முக்கிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
