தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு கடற்கரையில் இன்று காலை திடீரென லட்சக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரைப் பகுதியில் கடல் அவ்வப்போது பல மீட்டர் தூரத்திற்கு உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் வழக்கமாக நடைபெறுகிறது. அதேபோல், இப்பகுதியைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மணப்பாடு கடற்கரையில் இன்று காலை திடீரென ஏராளமான சிறிய ரக மீன்கள் கூட்டம் கூட்டமாகக் கரை ஒதுங்கத் தொடங்கின. உயிருடன் துடித்துக்கொண்டிருந்த மீன்களைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கூடைகளுடன் கடற்கரைக்குச் சென்று மீன்களைச் சேகரித்தனர்.
இதனால் கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பும் ஏற்பட்டது.
பொதுவாக மழைக்காலங்களில் இதுபோன்று மீன்கள் அதிக அளவில் கரை ஒதுங்குவது அவ்வப்போது நிகழ்வதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தற்போதைய சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
கடல் நீரின் தன்மை, ஆக்சிஜன் அளவு அல்லது கடல் நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்பட்டாலும், அதிகாரப்பூர்வமான விளக்கம் வெளியாகவில்லை.
