நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் ‘அரசன்’. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வடசென்னை படத்தின் உலகத்துடன் தொடர்புடைய கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருவதால், அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி என்பதால் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கிடையே படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர்.
இந்நிலையில், தீபாவளி விருந்தாக ‘தி வேர்ல்டு ஆஃப் அரசன்’ என்ற சிறப்பு முன்னோட்டத்தை வெளியிடுவதாக சிம்பு அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது அரசன் படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
இதில் சிம்புவின் மாஸ் தோற்றத்துடன், ‘ஃபயரு.. ஃபயரு.. ஃபயரு.. தாஸ் அண்ணன் வந்தாலே ஃபயரு’ என்ற கானா பாடல் இடம்பெற்றுள்ளது. சிம்புவின் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வெற்றிமாறன் படத்திற்கே உரிய அழுத்தமான காட்சிகள், கதைக்களம் குறித்த அறிமுகம் ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த கிளிம்ப்ஸ் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனால் அரசன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு தொடர்கிறது.
