பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் மற்றும் வகிதா அக்தர் இடையிலான சர்ச்சை மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு முத்துக்குமரன் வெளியிட்ட புதிய வீடியோவைத் தொடர்ந்து, வகிதா அக்தர் வெளியிட்டுள்ள வீடியோவும் கவனம் பெற்றுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட முத்துக்குமரன், வழக்கமாக சாப்பிடும் அசைவ உணவுகளைப் பட்டியலிட்டு, தற்போது நேரம் சரியில்லாததால் விரதம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த தீபாவளிக்கு இட்லி, சாம்பார் மட்டுமே உணவாக இருப்பதாகவும், அனைவருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று முருகனை வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, வகிதா அக்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்போன் திரையைப் பார்த்து காரி துப்புவது போன்ற வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இது முத்துக்குமரனின் வீடியோவுக்கான பதிலடியாக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே முத்துக்குமரன் தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக வகிதா குற்றம்சாட்டியிருந்தார். இதனை மறுத்த முத்துக்குமரன், இருவரும் நண்பர்களாக மட்டுமே பழகியதாக விளக்கமளித்ததுடன், வகிதா வெளியிட்ட வீடியோக்கள் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், இருவரின் புதிய சமூக வலைதளப் பதிவுகளும் மீண்டும் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
