நடந்து முடிந்த இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இப்போது அந்நாட்டு அரசியலில் யாரும் எதிர்பாராத மிகப்பெரிய திருப்பம் ஒன்று அரங்கேறியுள்ளது.
மொத்தம் 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை என்ற நிலையில், பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 27 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வென்ற போதிலும், அவரது கூட்டணிக்கு 53 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
மறுபுறம் முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட்டின் யாஷர் கட்சி 21 இடங்களிலும், அவரது கூட்டணி 48 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இரு கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால், 19 இடங்களில் வென்ற அரபுக் கட்சிகள் கிங் மேக்கராக மாறி காடி ஐசன்கோட்டிற்கு ஆதரவு தெரிவித்தன.
இதனால் ஐசன்கோட் அடுத்த பிரதமராவது உறுதி எனப் பேசப்பட்ட நிலையிலும், பதவியை விட்டுக்கொடுக்க விரும்பாத நெதன்யாகு ஒற்றுமை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.
ஆனால் அந்த அழைப்பை ஐசன்கோட் நிராகரித்த சூழலில்தான், தனது அரசியல் எதிரியான முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட்டை நெதன்யாகு திடீரெனச் சந்தித்துப் பேசியுள்ளார்.
கடந்த 1996 முதல் 1999 வரையிலும், பின்னர் 2009 முதல் 2021 வரையிலும் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் பிரதமராக இருந்த நெதன்யாகுவின் ஆட்சிக்கு முட்டுக்கட்டை போட்டு, 2021 ஜூன் முதல் ஓராண்டு காலம் அரபுக் கட்சிகளின் ஆதரவோடு பிரதமராக இருந்தவர்தான் இந்த நப்தாலி பென்னட்.
அதன்பிறகு யாயிர் லாபிட் ஆறு மாதம் பிரதமராக இருந்து மீண்டும் நெதன்யாகு ஆட்சிக்கு வந்த நிலையில், இருவருக்கும் இடையே கடும் பகை நிலவி வந்தது.
ஆனால், நாட்டில் ஒற்றுமை ஆட்சி அமைய வேண்டும் என்றும், முதல் பாதியில் ஐசன்கோட்டும் இரண்டாவது பாதியில் நெதன்யாகுவும் பிரதமராக வேண்டும் என்றும் பென்னட் விரும்பினார்.
இதற்கு ஐசன்கோட் உடன்படாததால், பழைய பகையை மறந்து நாடாளுமன்றத்தில் உள்ள லிகுட் கட்சியின் அறையில் நெதன்யாகுவும் பென்னட்டும் சுமார் மூன்று மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர்.
நடந்து முடிந்த தேர்தலில் பென்னட்டின் ‘பென்னட் 2026’ கட்சியும், யாயிர் லாபிட்டின் ‘யேஷ் அதித்’ கட்சியும் இணைந்து ‘டுகெதர்’ என்ற கூட்டணியாகப் போட்டியிட்டு 12 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
தற்போது 53 இடங்களை வைத்துள்ள நெதன்யாகுவுக்கு இந்த 12 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால், அவரது பலம் 65 ஆக உயர்ந்து மீண்டும் எளிதாகப் பிரதமர் நாற்காலியைக் கைப்பற்ற முடியும் என்பதால் இந்தச் சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
