தொலைத்தொடர்பு சந்தையில் வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம் ‘ஃப்ரீடம் 2.0’ என்ற புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிதாக சிம் கார்டு வாங்க விரும்புபவர்கள் வெறும் ரூ.1 செலுத்தி BSNL சிம் கார்டைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தச் சலுகையில் சிம் கார்டு மட்டுமின்றி, 24 நாட்கள் வேலிடிட்டியும் வழங்கப்படுகிறது. மேலும், இந்தக் காலகட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 1GB அதிவேக டேட்டா மற்றும் தினமும் 100 SMS உள்ளிட்ட வசதிகளும் கிடைக்கும். 24 நாட்கள் முடிந்த பிறகு வாடிக்கையாளர்கள் தங்களது தேவைக்கேற்ப ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும். இந்தச் சலுகையை 2027 பிப்ரவரி 8-ம் தேதி வரை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வரும் நிலையில், குறைந்த விலையில் சேவைகளை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்க்க BSNL முயற்சி செய்து வருகிறது. இதற்காக புதிய பகுதிகளில் நெட்வொர்க் வசதிகளையும் விரிவுபடுத்தி வருகிறது.
ரூ.1-க்கு சிம் பெறுவது எப்படி?
வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள BSNL வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரை அணுகலாம். அங்கு ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்கள் மற்றும் முகவரிச் சான்றுகளைச் சமர்ப்பித்து KYC சரிபார்ப்பை முடிக்க வேண்டும். பின்னர் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சிம் கார்டைப் பெற்றுக்கொள்ளலாம்.
குறைந்த செலவில் புதிய சிம் கார்டு மற்றும் மொபைல் சேவையை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்தச் சலுகை ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம்.
