இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் கோடிக்கணக்கான பயணிகளுக்கு மிக முக்கியமான மாற்றம் ஒன்று வரப்போகிறது. ரயில்களில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு வழங்கப்படும் ‘ஆர்ஏசி’ எனப்படும் ஒரே இருக்கையை இருவர் பகிர்ந்து பயணிக்கும் முறையை, முற்றிலுமாக ரத்து செய்ய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு பயணிகளிடம் இருந்தும் முழுமையான டிக்கெட் கட்டணத்தை வசூலித்துவிட்டு, உட்கார்ந்து செல்ல மட்டுமே பாதி இருக்கையைக் கொடுப்பது நியாயமற்றது எனப் பயணிகள் மத்தியில் நீண்ட காலமாகவே கடும் அதிருப்தி நிலவி வந்தது.
கடந்த 1983-84-ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அப்போதைய அமைச்சர் கனி கான் சவுத்ரியால் இந்த ஆர்ஏசி முறை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்பதிவு செய்த பயணிகள் வராத பட்சத்தில், காத்திருப்புப் பட்டியலில் முதலில் உள்ளவர்களுக்கு அந்தப் படுக்கையை வழங்கவே இது கொண்டு வரப்பட்டது.
பின்னர் 2016-ஆம் ஆண்டு செய்யப்பட்ட மாற்றத்தின்படி, ஸ்லீப்பர் பெட்டிகளில் ஏழு சைடு லோயர் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுப் பதினான்கு பேரும், மூன்றாம் வகுப்பு ஏசியில் நான்கு படுக்கைகளில் எட்டு பேரும், இரண்டாம் வகுப்பு ஏசியில் மூன்று படுக்கைகளில் ஆறு பேரும் ஆர்ஏசியில் பயணித்து வருகின்றனர்.
ஆனால், கணினி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் ஆர்ஏசி முறை இனித் தேவையில்லை என மூத்த ரயில்வே அதிகாரிகள் வாதிடுகின்றனர்.
தற்போது டிக்கெட் பரிசோதகர்கள் கையில் வைத்திருக்கும் ‘ஹேண்ட் ஹெல்டு டெர்மினல்’ (Hand-Held Terminal – HHT) என்ற கருவியானது நேரடியாகத் தலைமைச் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஒரு பயணி ரயிலில் ஏறவில்லை என்றால், டிடிஇ அந்தக் கருவியில் உடனடியாகப் பதிவு செய்தவுடனேயே, அடுத்த ரயில் நிலையத்தில் இருந்து கரண்ட் புக்கிங் செய்யும் பயணிகளுக்கு அந்தக் காலிப் படுக்கை தானாகவே ஒதுக்கப்பட்டுவிடும்.
மேலும், ஆர்ஏசி முறையை ரத்து செய்வதன் மூலம் டிடிஇ-க்கள் தங்களது தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்திப் படுக்கை ஒதுக்குவதில் செய்யும் முறைகேடுகளைத் தடுக்க முடியும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 2015-ல் மாற்றப்பட்ட விதிகளின்படி, பயணி ரயிலுக்கு வரவில்லை என்றால் அவருக்கு எந்தப் பணமும் திருப்பித் தரப்படுவதில்லை என்பதால் ரயில்வேக்கு நஷ்டமும் ஏற்படுவதில்லை.
எனவே, நாற்பத்து மூன்று ஆண்டுகாலப் பழமையான இந்த ஆர்ஏசி முறைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளது.
