‘TATA’-வுக்கு ரிசர்வ் வங்கி விடுத்த அதிரடி உத்தரவு!!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யமான டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான ‘டாடா சன்ஸ்’, கட்டாயம் பங்குச்சந்தையில் தன்னைப் பட்டியலிட வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

வரும் நவம்பர் 26-ஆம் தேதி டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், நவம்பர் 16-ஆம் தேதியன்று அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரிக்கு ஆர்பிஐ அனுப்பியுள்ள கடிதம் வர்த்தக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி விதிமுறைகள் குறித்து வழிகாட்டுதல் கேட்டு டாடா சன்ஸ் அனுப்பிய கடிதத்திற்குப் பதிலளித்த ஆர்பிஐ, உயர் அடுக்கு வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான அனைத்து விதிகளையும் பின்பற்றிப் பங்குச்சந்தைக்கு வருவது கட்டாயம் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த 2022 செப்டம்பர் மாதம், டாடா சன்ஸ் நிறுவனத்தை ‘அப்பர் லேயர் என்பிஎஃப்சி’ (Upper Layer NBFC) எனப்படும் உயர் அடுக்கு வங்கி சாரா நிதி நிறுவனமாக ஆர்பிஐ வகைப்படுத்தியது. விதிகளின்படி, இந்தப் பட்டியலில் இடம் பெறும் நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்குள், அதாவது 2025 செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட நிறுவனங்கள் இந்தப் பிரிவில் வரும் என்ற நிலையில், 2026 மார்ச் 31 நிலவரப்படி டாடா சன்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு இரண்டு லட்சத்து ஒரு ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

பங்குச்சந்தைக்கு வருவதைத் தவிர்ப்பதற்காகத் தனது கடன்கள் அனைத்தையும் அடைத்துவிட்டு, கடந்த 2024 மார்ச் மாதம் முக்கிய முதலீட்டு நிறுவனம் என்ற பதிவைத் திரும்பப் பெறக் கோரி டாடா சன்ஸ் விண்ணப்பித்திருந்தது.

ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான 2026-27 பட்டியலிலும் டாடா சன்ஸைத் தக்கவைத்த ஆர்பிஐ, கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி அந்நிறுவனத்தின் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வமாக நிராகரித்துப் பங்குச்சந்தையில் இருந்து தப்பிக்கும் வழியை அடைத்தது.

டாடா சன்ஸ் நிறுவனத்தில் 66 சதவீதப் பங்குகளை வைத்துள்ள ‘டாடா டிரஸ்ட்ஸ்’ அமைப்பு, நிறுவனத்தைத் தொடர்ந்து தனியார் நிறுவனமாகவே வைத்திருக்க விரும்புகிறது.

ஆனால், 18.37 சதவீதப் பங்குகளை வைத்துள்ள சபூர்ஜி பல்லோன்ஜி குழுமமும், ரத்தன் டாடாவின் சகோதரர் ஜிம்மி டாடாவும் நிறுவனம் பங்குச்சந்தைக்கு வர வேண்டும் எனத் தீவிரமாக வலியுறுத்தி வரும் நிலையில், ஆர்பிஐ-யின் இந்தக் கறார் உத்தரவு டாடா சன்ஸ் நிறுவனத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News