இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, ரீசார்ஜ் முடிவடைந்த பிறகும் நீண்ட நாட்களுக்கு இலவசமாக இன்கமிங் அழைப்புகளைப் பெறும் வசதியைத் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தது.
ஆனால், இனி ரீசார்ஜ் செய்யாமல் வைத்திருக்கும் சிம் கார்டுகளில் இன்கமிங் அழைப்புகள் மட்டுமல்லாமல், இன்கமிங் எஸ்எம்எஸ் சேவைகளையும் உடனடியாகத் துண்டிக்க ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு இப்போதே எச்சரிக்கைக் குறுஞ்செய்திகளை ஜியோ அனுப்பத் தொடங்கியுள்ளது.
தொழில்நுட்பத் தகவல்களை வெளியிடும் அபிஷேக் யாதவ் என்பவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் இது தொடர்பான ஆதாரப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், வாடிக்கையாளரின் முந்தைய ரீசார்ஜ் திட்டம் முடிவடைந்துவிட்டதாகவும், இன்கமிங் அழைப்புகள் எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம் என்பதால் தடையின்றிப் பேச உடனடியாக ரீசார்ஜ் செய்யும்படியும் ஜியோவின் தானியங்கி அமைப்பில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
அழைப்புகளோடு சேர்த்து வங்கி ஓடிபி உள்ளிட்ட குறுஞ்செய்திகளும் இனி பிளாக் செய்யப்படும் எனக் கூறப்படுவதால், இரண்டாவது சிம் கார்டாக ஜியோவைப் பயன்படுத்தி வந்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்கனவே ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜ் முடிந்த சில நாட்களிலேயே இன்கமிங் சேவையை நிறுத்தி வரும் நிலையில், இப்போது ஜியோவும் அதே பாணியைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது.
சிம் கார்டைத் துண்டிக்காமல் தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க விரும்பும் சாமானிய மக்களுக்காக, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கடந்த செப்டம்பர் மாதம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது.
இணைய வசதி தேவையில்லாதவர்களுக்குக் குறைந்த விலையில் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே கொண்ட சிறப்புத் திட்டங்களை வழங்க வேண்டும் என்பதே அந்த உத்தரவாகும்.
டிராயின் இந்த வழிகாட்டுதலின்படி, ஜியோ நிறுவனம் சமீபத்தில் நான்கு புதிய வாய்ஸ் ஒன்லி பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி 147 ரூபாய் திட்டத்தில் 22 நாட்களுக்கும், 177 ரூபாய் திட்டத்தில் 28 நாட்களுக்கும், 196 ரூபாய் திட்டத்தில் 30 நாட்களுக்கும் இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் வசதியைப் பெறலாம்.
மேலும், 197 ரூபாய் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அதே தேதியில் புதுப்பிக்கும் வகையில் ஒரு காலண்டர் மாத வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இனி ஜியோ சிம் கார்டில் இன்கமிங் அழைப்புகளைப் பெற வேண்டுமென்றால், குறைந்தபட்சம் இந்தச் சிறிய திட்டங்களையாவது ரீசார்ஜ் செய்ய வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
