காதலுக்காக இந்தியா வந்த கனடா பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…

ஆன்லைனில் மலரும் காதல்கள் எல்லாமே சுபமாக முடிந்துவிடுவதில்லை என்பதற்கு உதாரணமாக, கனடாவில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து இந்திய இளைஞரைத் திருமணம் செய்ய வந்த அறுபத்தி ஒரு வயது பெண்ணிற்குக் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

அரியானா மாநிலம் பானிபட் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியரான நிதின் என்பவருக்கும், கனடா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் சுமார் ஓராண்டுக்கு முன்பு டேட்டிங் செயலி வழியாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கிய இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறவே, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.

காதலுக்குத் தூரம் ஒரு தடையல்ல என்ற எண்ணத்தில், அந்தக் கனடா பெண் சுற்றுலா விசா எடுத்துக்கொண்டு கடந்த நவம்பர் 11-ஆம் தேதி டெல்லி விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். விமான நிலையத்திற்கே நேரில் சென்று தனது காதலியை உற்சாகமாக வரவேற்ற நிதின், அவரை ராஜஸ்தான் மாநிலம் நீம்ரானா பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு இருவரும் இரண்டு நாட்கள் தங்கியிருந்து அடுத்தகட்டத் திருமண ஏற்பாடுகள் குறித்துப் பேசி வந்தபோதுதான், இந்தக் காதல் கதையில் யாரும் எதிர்பாராத அந்தத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு மிகவும் இளமையான தோற்றத்துடன் காணப்பட்ட அந்தப் பெண்ணின் உண்மையான வயது அறுபத்தி ஒன்று என்பது அப்போதுதான் நிதினுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தெரியவந்துள்ளது.

தான் காதலித்த பெண் அறுபது வயதைக் கடந்த மூதாட்டி என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த நிதின், அவரைத் திருமணம் செய்துகொள்ளப் பிடிவாதமாக மறுத்துவிட்டார். ஓராண்டு காலமாக ஆன்லைனில் வளர்ந்த காதல், நேரில் சந்தித்த இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது.

காதலனின் இந்த முடிவால் கடும் அதிருப்தியடைந்த அந்தப் பெண், நவம்பர் 13-ஆம் தேதி உடனடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தைத் தொடர்புகொண்டு தனக்கு நேர்ந்த ஏமாற்றம் குறித்துப் புகார் அளித்தார்.

தூதரக அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நீம்ரானா போலீசார், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தற்போது அந்தக் கனடா பெண் கோட்புட்லியில் உள்ள பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி ஆசிரியரான நிதினிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணக் கனவோடு கடல் கடந்து வந்த பெண்ணின் விவகாரம் காவல் நிலையம் வரை சென்றிருப்பது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News