அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, H-1B விசா மற்றும் கிரீன் கார்டு நடைமுறைகளில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்து வருகிறது.
இதனால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கும், அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் இந்தியத் தொழில்நுட்ப ஊழியர்களுக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது.
அந்த வகையில், வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கான விதிகள் மற்றும் நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டமான PERM முறையிலும் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிறுவனங்கள், அதே பணியிடங்களுக்கு வெளிநாட்டு ஊழியர்களை உடனடியாக நியமிக்க முடியாத வகையில் இரண்டு ஆண்டுகள் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.
அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பைப் பறித்து, குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டவர்களை நியமிப்பதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.
மேலும், வெளிநாட்டு ஊழியர்களைத் தேர்வு செய்வதற்கு முன்பு, காலியாக உள்ள பணியிடங்களுக்கான விளம்பரங்களை நிறுவனங்கள் குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு இணையதளங்களில் வெளியிட வேண்டும் என்ற புதிய பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த மாற்றங்கள் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற இந்திய ஐடி நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக அமையலாம். தற்போது H-1B விசா மூலம் இந்திய ஊழியர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதிலும், பின்னர் அவர்களுக்கு கிரீன் கார்டு பெற்றுத் தருவதிலும் கூடுதல் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் பல நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே உள்ளூர் ஊழியர்களைப் பணியமர்த்துவது அல்லது இந்தியாவில் இருந்தே திட்டங்களைச் செயல்படுத்துவது போன்ற மாற்று வழிகளில் கவனம் செலுத்தி வருகின்றன.
அமெரிக்க அரசின் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் வேலை செய்து நிரந்தரமாகக் குடியேற வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய ஐடி ஊழியர்களுக்குப் பெரும் பின்னடைவாக அமையக்கூடும்.
