ஈரானில் பூமிக்கடியில் 2,500 ஏவுகணைகள் தயார்? அமெரிக்காவுக்கு காத்திருக்கும் பேராபத்து!

ஈரானின் ராணுவ வலிமையை முழுமையாக அழித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வந்த நிலையில், அதற்கு நேர்மாறான அதிர்ச்சித் தகவல் ஒன்றை அமெரிக்க உளவுத்துறையே இப்போது வெளியிட்டுள்ளது.

ஈரானின் ஆயுதக் கிடங்கில் இன்னும் ஆயிரத்து ஐநூறு முதல் இரண்டாயிரத்து ஐநூறு வரையிலான ஏவுகணைகள் கையிருப்பில் உள்ளதாக ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒருவேளை மீண்டும் முழு அளவிலான போர் வெடித்தால், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் படைகளைத் தாக்கும் வல்லமை ஈரானிடம் இன்னும் குறையவில்லை என்பதையே இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இஸ்ரேல் ராணுவ அதிகாரிகளும் ஈரானிடம் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த 2025 ஜூன் மாதம் நடந்த பன்னிரண்டு நாள் போருக்கும், பிப்ரவரி மாதம் தொடங்கிய தற்போதைய மோதலுக்கும் இடைப்பட்ட காலத்திலேயே ஈரான் தனது ஆயுதங்களை முழுமையாக மீட்டெடுத்ததாக அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி சிமோன் லெடீன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானின் நிலத்தடி ஆயுதக் கிடங்குகளின் நுழைவாயில்கள் இடிந்து விழுந்த போதிலும், ஈரான் அவற்றை மீண்டும் தோண்டி எடுத்து, உள்ளே பதுக்கி வைத்திருந்த உதிரிபாகங்களைக் கொண்டு கடந்த செப்டம்பர் முதலே ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியிருப்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.

வெறும் ஏவுகணைகளின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், அவற்றைப் பயன்படுத்தும் யுக்தியையும் ஈரான் இப்போது மாற்றியுள்ளது எனப் பாதுகாப்பு நிபுணர் பிலால் சாப் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ரஷ்யா போன்ற நட்பு நாடுகளின் உளவுத் தகவல்கள் மற்றும் துல்லியமான இலக்குத் தரவுகளின் உதவியோடு, ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் ஒன்றாக இணைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ரேடார் மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது முக்கிய ராணுவத் தளவாடங்களைப் பாதுகாப்பிற்காக இஸ்ரேலுக்கு மாற்றியுள்ளது.

ஈரானின் ரகசிய நிலத்தடித் தளங்களில் எத்தனை ஏவுகணைகள் தயாராக உள்ளன என்பதைத் துல்லியமாகக் கணக்கிடுவது உளவுத்துறைக்கே பெரும் சவாலாக இருப்பதாக முன்னாள் சிஐஏ ஆய்வாளர் ஜிம் லாம்சன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தலாமா என டிரம்ப் நிர்வாகம் ஆலோசித்து வரும் வேளையில், கடும் சேதங்களைச் சந்தித்த பிறகும் அடுத்தகட்டப் பெரிய மோதலுக்கு ஈரான் தன்னைத் தீவிரமாகத் தயார்படுத்தி வருகிறது என்ற தகவல் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News