ஈரான் உடனான போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் நேரத்தில், அமெரிக்காவின் மூன்றாவது பிரம்மாண்ட விமானம் தாங்கிக் கப்பலான ‘யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட்’ (USS Theodore Roosevelt – CVN-71) , ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மத்திய கிழக்குப் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே அரபிக்கடல் பகுதியில் முகாமிட்டுள்ள ‘யுஎஸ்எஸ் ஜார்ஜ் புஷ்’ மற்றும் ‘யுஎஸ்எஸ் ஜார்ஜ் வாஷிங்டன்’ ஆகிய இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களுடன் இப்போது இந்த மூன்றாவது கப்பலும் இணைந்துள்ளது. ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிடுவதற்காக இருபதுக்கும் மேற்பட்ட அமெரிக்கப் போர்க்கப்பல்கள் இந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2026 பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலில் தொடங்கிய இந்தப் போர், அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால் மேலும் தீவிரமடைந்தது.
குறிப்பாகக் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் உள்ள ஈரான் துறைமுகங்களுக்கு வணிகக் கப்பல்கள் செல்ல முடியாதபடி அமெரிக்கா கடல்வழித் தடையை விதித்து ஈரானின் பொருளாதாரத்தை முடக்கி வருகிறது.
அமெரிக்காவின் இந்தப் படைக் குவிப்பிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசியுள்ள ஈரானின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் காசெம் கரிபாபாடி (Kazem Gharibabadi), தங்கள் நாடு இப்போதும் போர் நிலையில்தான் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ராஜதந்திரப் பேச்சுவார்த்தை, பொருளாதார முற்றுகை அல்லது நேரடி ராணுவத் தாக்குதல் என அமெரிக்கா எந்த வழியில் வந்தாலும் அதை எதிர்கொள்ள ஈரான் முழுத் தயாராக இருப்பதாக அவர் அரசுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் அமெரிக்கா மூன்று முறை தனது வாக்குறுதிகளை மீறி நம்பிக்கையைக் கெடுத்துவிட்டதால், பேச்சுவார்த்தை மேஜையில் அமெரிக்காவை நம்ப முடியாது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முந்தைய உடன்படிக்கைக்குப் பிறகு அமெரிக்கா புதிதாகக் குவித்துள்ள ராணுவத் தளவாடங்கள் குறித்து நடைமுறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள கரிபாபாடி, ஒரு முக்கியத் தகவலையும் வெளியிட்டுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வந்து ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முதலில் ஏழு நாட்கள் கால அவகாசம் கேட்டிருந்த ஈரான், மத்தியஸ்தர்களுடன் இரண்டு மாதங்களாக நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதை நாற்பத்தெட்டு மணி நேரமாகக் குறைத்துள்ளது.
இதன்படி வெறும் இரண்டே நாட்களில் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான திட்டம் இப்போது பேச்சுவார்த்தை மேஜையில் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
