அமெரிக்காவுக்கு விழும் இடி மேல் இடி! அடுத்தடுத்து முடங்கும் தொழில்நுட்பங்கள்? என்ன நடக்கிறது?

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகத் தொழில்நுட்ப முடக்கங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வரும் நிலையில், திங்கள்கிழமை அன்று அந்நாட்டின் மிக முக்கிய வங்கிகளின் ஆன்லைன் சேவைகள் திடீரென முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தங்களது வங்கிக் கணக்குகளை இணையம் வழியாகப் பயன்படுத்த முடியாமலும், பணப் பரிவர்த்தனை செய்ய முடியாமலும் லட்சக்கணக்கான மக்கள் தவித்தனர்.

இணையத் தடைகளைக் கண்காணிக்கும் ‘டவுன் டிடெக்டர்’ தளத்தின் தகவல்படி, பேங்க் ஆஃப் அமெரிக்கா, சேஸ் வங்கி (Chase Bank), யுஎஸ் பேங்க், வெல்ஸ் பார்கோ (Wells Fargo) மற்றும் ட்ரூயிஸ்ட் (Truist) ஆகிய ஐந்து முன்னணி வங்கிகளின் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

சேஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கிற்குள் செல்ல முயன்றபோது, சில சேவைகள் தற்போது செயல்படவில்லை என்றும், அதைச் சரி செய்யும் பணி நடந்து வருவதால் சிறிது நேரம் கழித்து முயற்சிக்கும்படியும் திரையில் தகவல் தோன்றியுள்ளது.

இது குறித்து உடனடியாக விளக்கமளித்த சேஸ் வங்கியின் செய்தித் தொடர்பாளர், இது சைபர் தாக்குதல் கிடையாது என்றும், வெறும் தொழில்நுட்பப் பிழை மட்டுமே என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தக் கோளாறால் பணப் பரிவர்த்தனைகள் முடிவடைய வழக்கத்தை விடக் கூடுதல் நேரம் எடுப்பதாகவும், இருப்பினும் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல யுஎஸ் பேங்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது வங்கியின் நேரடிச் செயல்பாடுகளில் எந்தப் பாதிப்பும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அமெரிக்காவில் உடனடிப் பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் ‘ஜெல்லே’ செயலி வழியாக மற்ற வங்கிகளுக்குப் பணம் அனுப்பும்போதும் பெறும்போதும் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜெல்லே பணப் பரிவர்த்தனை வலையமைப்பை ‘ஏர்லி வார்னிங் சர்வீசஸ்’ என்ற நிறுவனம் இயக்கி வருகிறது. தற்போது பாதிப்பிற்குள்ளான பேங்க் ஆஃப் அமெரிக்கா, ஜேபி மோர்கன் சேஸ், வெல்ஸ் பார்கோ உள்ளிட்ட ஏழு பெரிய வங்கிகள்தான் இந்த நிறுவனத்தின் கூட்டு உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக் மற்றும் டீம்ஸ் சேவைகள் உலகம் முழுவதும் பல மணி நேரம் முடங்கிய அதிர்ச்சி விலகுவதற்குள்ளாகவே, இப்போது அமெரிக்காவின் வங்கித் துறையும் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News