இந்தியர்களுக்குப் பேரதிர்ச்சி கொடுத்த மலேசியா! ஜனவரி 1 முதல் இலவச விசா சலுகை ரத்து?

இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த விசா இல்லாத இலவசப் பயணச் சலுகையை, வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் முற்றிலுமாக நிறுத்தப்போவதாக மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நவம்பர் 17-ஆம் தேதி மலேசியக் குடியுரிமைத் துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மலேசியாவிற்குள் நுழைய வேண்டுமென்றால், பயணத்திற்கு முன்பாகவே முறையான விசா பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் மலேசியாவின் ‘மை விசா’ இணையதளத்தில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா விண்ணப்பிக்கும் முறையிலும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள விதியின்படி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது புதிய விண்ணப்பம் என்ற நிலையிலோ அல்லது கட்டணம் செலுத்தப்படாத நிலையிலோ ஏழு வேலை நாட்களுக்கு மேல் ஒரு விண்ணப்பம் நிலுவையில் இருந்தால், அது தானாகவே காலாவதியாகிவிடும்.

கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு முன்பு போடப்பட்ட விண்ணப்பங்களுக்கும் இது பொருந்தும் என்பதோடு, காலாவதியானால் மீண்டும் முதலில் இருந்து புதிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விசா விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அல்லது நிராகரிக்கப்பட்டாலும், செலுத்தப்பட்ட விசா பரிசீலனைக் கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித் தரப்படாது எனத் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது அரசின் கொள்கைகள் மாறினாலோ கூடக் கட்டணம் திரும்பக் கிடைக்காது. இதுதவிர, கடந்த செப்டம்பர் 1 முதல் பலமுறை பயணம் செய்யும் ‘மல்டிபிள் என்ட்ரி விசா’ சலுகையானது முப்பத்தி ஒன்று நாடுகளுக்கு மட்டுமே சுருக்கப்பட்டு, வர்த்தகம், மருத்துவச் சிகிச்சை, திருமணச் சுற்றுலா மற்றும் கப்பல் சுற்றுலா செல்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

மலேசியாவிற்கு வரும் வெளிநாட்டினர் தங்களது மருத்துவச் செலவுகளைத் தாங்களே ஏற்க வேண்டும் என்பதால், பயணக் காலம் முழுவதற்குமான மருத்துவக் காப்பீடு எடுக்குமாறு நவம்பர் 16 அன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக உடனடியாக டிஜிட்டல் காப்பீட்டுச் சான்றிதழ் வழங்கும் ‘மை டிரிப் பாஸ்’ தளத்தைப் பயன்படுத்தி, அந்த ஆவணத்தை விசா விண்ணப்பத்துடன் இணைக்குமாறு மலேசிய அரசு பரிந்துரைத்துள்ளது.

Related News

Latest News