சமூக வலைதளங்களில் எத்தனையோ வீடியோக்கள் தினமும் வைரலாகிச் சில நாட்களில் மறக்கப்பட்டுவிடும். ஆனால் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு வயதுச் சிறுவன் ஒருவன், புதிய ஸ்கூட்டருக்கு முன்பு கொடுத்த ஸ்டைலான போஸ், இன்று அவனது எதிர்கால வாழ்க்கையையே ஒளிமயமாக மாற்றியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் பகுதியைச் சேர்ந்த ருத்ரான்ஷ் சிங் தாக்கூர் என்ற இரண்டு வயதுக் குழந்தை, தனது பெற்றோர் மற்றும் அக்காவுடன் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்க ஷோரூமிற்குச் சென்றுள்ளான்.
அப்போது புதிய ஸ்கூட்டருக்கு முன்பாகக் கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு, இரண்டு கைகளையும் சட்டைப் பாக்கெட்டில் விட்டபடி மிகுந்த தன்னம்பிக்கையோடு அந்தச் சிறுவன் கொடுத்த ஸ்டைலான போஸ் வீடியோவாக எடுக்கப்பட்டது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்தச் சிறிய வீடியோ, யாரும் எதிர்பாராத விதமாகப் பதின்மூன்று கோடியே எழுபது லட்சம் வியூஸ்களையும், அறுபத்தெட்டாயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்டுகளையும் வாரிக் குவித்து இணையத்தையே புரட்டிப் போட்டது.
சிறுவனின் இந்தத் துறுதுறுப்பான தோற்றத்தைப் பார்த்த நெட்டிசன்கள் அவனுக்கு ‘ஆரா கிட்’ எனப் பெயர் சூட்டியதோடு, குட்டி டான் போல இருப்பதாகவும், ஹோண்டா நிறுவனத்தின் புதிய சேர்மன் இவன்தான் என்றும் நகைச்சுவையாகக் கொண்டாடித் தீர்த்தனர். இந்த வீடியோவின் மாபெரும் வெற்றி, அந்தக் குடும்பத்தினர் ஸ்கூட்டர் வாங்கிய ‘சாய் பாயிண்ட் ஹோண்டா’ ஷோரூமின் உரிமையாளரான திலீப் போபடே பாட்டீலின் கவனத்திற்கும் சென்றது.
இதையடுத்துச் சிறுவன் ருத்ரான்ஷையும் அவனது குடும்பத்தினரையும் மீண்டும் தனது ஷோரூமிற்கு வரவழைத்துப் பாராட்டிய உரிமையாளர் திலீப் பாட்டீல், யாரும் எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார்.
சிறுவன் ருத்ரான்ஷின் எல்கேஜி வகுப்பு தொடங்கி, அவன் கல்லூரியில் பட்டப்படிப்பு முடிக்கும் வரையிலான ஒட்டுமொத்தக் கல்விச் செலவையும் தானே முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
யஷ் சின்சோல்கர் என்பவர் இணையத்தில் பகிர்ந்துள்ள இந்தத் தகவல் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. வெறும் பொம்மைகளைப் பரிசாகக் கொடுக்காமல் தன் மகனின் எதிர்காலத்தையே பரிசாக வழங்கியுள்ளதாகச் சிறுவனின் பெற்றோர் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.
