ரஷ்யாவுக்கு பேரிடியை இறக்கிய ‘உக்ரைன்’? நடுக்கடலில் மூழ்கிய ரஷ்ய ‘போர்க்கப்பல்’!

லிபியாவின் முக்கிய துறைமுக நகரமான பெங்காசியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான ‘மெர்குரி’ என்ற போர்க்கப்பல், நள்ளிரவில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் கடலில் மூழ்கிய சம்பவம் சர்வதேச பாதுகாப்பு அரங்கில் உச்சக்கட்ட அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனின் தெற்கு எல்லைப் பகுதியிலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைல்கள் தொலைவில், ஆப்பிரிக்கக் கண்டத்தை ஒட்டியுள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது, பல ஆண்டுகளாக நீடித்து வரும் போரின் எல்லைகளை இதுவரை இல்லாத புதிய தளத்திற்கு விரிவுபடுத்தியுள்ளது.

எரிபொருள் நிரப்புவதற்காகவும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுவதற்காகவும் பெங்காசி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த ரஷ்ய போர்க்கப்பலை நோக்கி, உக்ரைனின் அதிநவீன கடல்வழி ட்ரோன்கள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டதாக லிபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் படையினர் நான்கு ட்ரோன்களை நடுவழியே இடைமறித்து அழித்த போதிலும், மீதமுள்ள இரண்டு ட்ரோன்கள் போர்க்கப்பலின் மீது நேரடியாக மோதி வெடித்ததில் கப்பல் பலத்த சேதமடைந்து நீரில் மூழ்கியது.

இந்த அதிரடித் தாக்குதல் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே, அதே கடற்பகுதியில் ராணுவப் பொருட்களை ஏற்றிச் சென்ற ரஷ்ய தொடர்புடைய மற்றொரு சரக்குக் கப்பல் மீதும் கடல் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சொந்தமாகப் பெரிய கடற்படை இல்லாத போதிலும், அதிநவீன கடல் ட்ரோன் தொழில்நுட்பத்தைக் கொண்டு கருங்கடலில் ஏற்கனவே பல ரஷ்யக் கப்பல்களை முடக்கிய உக்ரைன், தற்போது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து மத்திய தரைக்கடலிலும் ரஷ்ய இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கத் தொடங்கியுள்ளது ராணுவ ஆய்வாளர்களைப் பெரும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட கப்பலில் இருந்த மாலுமிகள் மீட்கப்பட்ட போதிலும், சர்வதேச மோதல்களைத் தங்களின் கடல் எல்லைக்குள் கொண்டு வருவதை ஏற்க முடியாது என்று கிழக்கு லிபிய நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கருங்கடலைத் தாண்டி ஆப்பிரிக்கக் கடற்பரப்பு வரை உக்ரைனின் நீண்ட தூரத் தாக்குதல்கள் பரவியிருப்பது, ரஷ்யப் படைகளுக்கு மிகப்பெரிய பாதுகாப்புச் சவாலாக மாறியுள்ளது.

Related News

Latest News