கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சரிந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் பொருளாதார மாற்றங்களால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களாக தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்து வந்தது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தைத் தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், படிப்படியாகக் குறைந்து ரூ.90 ஆயிரம் அளவுக்கு வந்தது.
சென்னையில் கடந்த 20-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.11,510-க்கும், ஒரு சவரன் ரூ.92,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 21-ந்தேதி கிராமுக்கு ரூ.45-ம், சவரனுக்கு ரூ.360-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11,465-க்கும், ஒரு சவரன் ரூ.91,720-க்கும் விற்பனையானது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், இன்று தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ரூ.92,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.135 அதிகரித்து ரூ.11,600-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயருமா அல்லது மீண்டும் சரியுமா என்ற எதிர்பார்ப்பு நகை வாங்குவோர் மத்தியில் எழுந்துள்ளது.
