தமிழக மக்களே உஷார்! அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (நவம்பர் 25) நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 26ஆம் தேதி திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 27ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பிற மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 28ஆம் தேதியும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related News

Latest News