ஒருபுறம் அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டு உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், 140 கிலோ எடையுடன் உடல் பருமனால் அவதிப்பட்டு வருகிறார்.
எந்த நேரத்திலும் அவருக்கு மாரடைப்பு வரலாம் என்று தென்கொரிய உளவுத்துறை பகீர் ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், அவரது மகள் அதிகாரத்தைக் கைப்பற்றத் தயாராகி வருவது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
தென்கொரியாவின் தேசிய உளவுத்துறையான ‘என்.ஐ.எஸ்’ (NIS), வடகொரிய அதிபரின் தற்போதைய நிலை குறித்து நாடாளுமன்றத்தில் ஒரு அதிர்ச்சிகரமான ரகசிய அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதன்படி, கிம் ஜாங் உன்னின் உடல் எடை சுமார் 140 கிலோவைத் தாண்டிவிட்டதாகவும், அவர் மிகக் கடுமையான உடல் பருமனால் அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது தாத்தா மற்றும் அப்பா ஆகிய இருவருமே அதிக உடல் பருமன் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் மாரடைப்பு ஏற்பட்டுதான் உயிரிழந்தனர். அதே பழக்கங்கள் தற்போது கிம் ஜாங் உன்னுக்கும் இருப்பதால், அவருக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் மிக அதிகமாக உள்ளது.
இருப்பினும், சமீபத்தில் ஒரு போர்க்கப்பலை அவர் ஆய்வு செய்தபோது, எந்தவிதச் சிரமமும் இன்றி அவர் மாடிப்படிகளில் ஓடி ஏறியதை உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, உடல் பருமனைத் தவிர்த்துப் பார்த்தால், அவரது உடல்நிலையில் வேறு எந்தவொரு பெரிய பாதிப்போ அல்லது நோய்க்கான அறிகுறிகளோ தற்போதைக்கு இல்லை எனத் தென்கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ஆனால், அவருக்கு திடீரென ஏதேனும் நேர்ந்தால் வடகொரியாவின் அடுத்த அதிபர் யார் என்ற கேள்விக்கு, இப்போது ஒரு தெளிவான பதில் கிடைத்துள்ளது.
ஆம், கிம் ஜாங் உன்னின் மகளான ‘ஜு-ஏ’ (Ju-ae) தான் அடுத்த வடகொரிய அதிபராகப் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது. சுமார் 160 சென்டிமீட்டர் உயரமும் 50 கிலோ எடையும் கொண்ட அந்தச் சிறுமிக்கு தற்போது 11 வயது மட்டுமே ஆகிறது.
ஆரம்பத்தில் ராணுவம் மற்றும் ஏவுகணைச் சோதனைகள் தொடர்பான நிகழ்ச்சிகளில் மட்டுமே தன் தந்தையுடன் கலந்துகொண்ட அந்தச் சிறுமி, தற்போது அரசியல், வெளியுறவுத்துறை மற்றும் மக்கள் நலன் சார்ந்த பொது நிகழ்ச்சிகளிலும் மிகத் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார்.
இந்த ஆண்டு மட்டும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட அரசு நிகழ்ச்சிகளில் அந்தச் சிறுமி தன் தந்தையுடன் வலம் வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் மாவீரர்கள் தின அஞ்சலி போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில், ராணுவ அதிகாரிகளுக்கு மத்தியில் அவர் மிக முக்கிய இடத்தில் நிறுத்தப்படுகிறார்.
எனவே, வருங்காலத்தில் வடகொரியாவின் மாபெரும் அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்காக, கிம் ஜாங் உன்னின் மகள் இப்போதிருந்தே மிகத் தீவிரமாகத் தயாராகி வருகிறார் என்பதை இந்த நடவடிக்கைகள் தெளிவாக உணர்த்துகின்றன.
