மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட காஸா அமைதித் திட்டத்தை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாக நிராகரித்துள்ளார்.
நீண்டகால அரசியல் கூட்டாளிகளாகக் கருதப்பட்ட டிரம்ப் மற்றும் நெதன்யாகு இடையே இந்தத் திட்டம் தொடர்பாகப் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், டிரம்பின் அமைதி வாரியத் தலைவர் நிக்கோலே மிலாடெனோவ்(Nickolay Mladenov) இஸ்ரேலிய ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், மீண்டும் ஒரு அக்டோபர் 7 தாக்குதல் நடக்காமல் தடுக்க இந்த அமைதித் திட்டம் ஒன்றே வழி என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.
இந்த அமைதித் திட்டத்தின்படி, ஹமாஸ் அமைப்பு தங்களின் வசம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் புதிதாக உருவாக்கப்பட உள்ள பாலஸ்தீன நிர்வாக அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் தனது படைகளை காஸாவிலிருந்து படிப்படியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். ஆனால், ஆயுதங்களை ஒப்படைப்பதோடு மட்டும் நில்லாமல், ஹமாஸின் ஒவ்வொரு ஆயுதமும் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என நெதன்யாகு பிடிவாதம் காட்டுகிறார்.
குறிப்பாக, சாதாரண ரக துப்பாக்கிகள் முதல் ஏவுகணைகள் வரை அனைத்தும் இஸ்ரேலிய ராணுவத்தால் அழிக்கப்பட வேண்டும் என்பது அவரது நிபந்தனையாக உள்ளது.
அமைதி வாரியத் தலைவர் மிலாடெனோவ் இதுகுறித்து கூறுகையில், ஹமாஸ் முழுமையாக நிராயுதபாணியாக்கப்பட்ட பிறகே இஸ்ரேல் படைகள் வெளியேறும் என ஏற்கனவே நெதன்யாகுவிடம் உறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அதேநேரம், இந்தத் திட்டத்தில் இப்போது அமெரிக்கா, ஹமாஸ் மற்றும் அமைதி வாரியம் ஆகிய தரப்பினர் மட்டுமே ஒரு புரிதலுக்கு வந்துள்ளனர். இஸ்ரேல் இன்னும் இதில் இணையாதது ஒரு முக்கியமான சிக்கலாகப் பார்க்கப்படுகிறது.
ஹமாஸிடம் உள்ள கடைசி ஆயுதம் வரை ஒப்படைக்கப்படும் பட்சத்தில், இஸ்ரேல் அங்கிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பது அமெரிக்கத் தரப்பின் வாதமாக இருக்கிறது.
நெதன்யாகுவின் இந்த நிராகரிப்பு அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் ஒரு புதிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
“நாங்கள் முன்வைக்கும் இந்த வாய்ப்பு மட்டுமே காஸா துயரத்திற்கு நிரந்தரத் தீர்வாக அமையும்” என்று மிலாடெனோவ் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
தற்போது இதற்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேல் தனது பிடிவாதத்தைக் தளர்த்திக் கொண்டு இந்தத் திட்டத்தை ஏற்குமா அல்லது வளைகுடா பிராந்தியத்தில் போர் இன்னும் நீடிக்குமா என்பது உலக நாடுகளிடையே பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
