பொதுவாக ரயில் பயணம் என்பது பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இயற்கை காட்சிகள், மலைப்பகுதிகள் மற்றும் கிராமப்புற அழகுகளை ரசித்தபடி பயணம் செய்யும் அனுபவம் பயணிகளை கவர்கிறது. உலகின் மிகப்பெரிய ரயில்வே வலையமைப்புகளில் ஒன்றான இந்திய ரயில்வே, தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி கோடிக்கணக்கான மக்களுக்கு சேவை செய்து வருகிறது.
பெரும்பாலான ரயில்களில் பயணிகள் உணவை வாங்கி சாப்பிட வேண்டியிருக்கும். ஆனால், இந்தியாவில் ஒரு சிறப்பு ரயில் மட்டும் பயணிகளுக்கு இலவசமாக மூன்று வேளையும் உணவு வழங்குகிறது என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தும் தகவலாகும். அந்த ரயில் தான் சச்கண்ட் எக்ஸ்பிரஸ் (Sachkhand Express).
இந்த ரயில் தனது நீண்ட தூர பயணத்தின் போது பயணிகளுக்கு காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் இலவச உணவு வழங்குகிறது. இந்த சேவை ‘லங்கர்’ எனப்படும் சமூக சமையலறை முறையின் மூலம் நடைபெறுகிறது. ரயில் செல்லும் பாதையில் உள்ள ஆறு முக்கிய நிலையங்களில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.
பயணிகள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் உணவை பெற்றுக்கொள்ளலாம். மேலும், உணவு வழங்கும் நிலையங்களில் பயணிகள் சிரமமின்றி உணவு பெறும் வகையில் ரயில் போதுமான நேரம் நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. பலர் தங்களது சொந்த பாத்திரங்களை கொண்டு வந்து உணவை பெற்றுச் செல்கின்றனர்.
லங்கரில் வழங்கப்படும் உணவுகள் பெரும்பாலும் சைவ உணவுகளாகும். பருப்பு, சப்ஜி, ரொட்டி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. மேலும், தினசரி மெனுவில் மாற்றங்களும் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சமூக சேவையாக வழங்கப்படும் இந்த இலவச உணவு திட்டம், சச்கண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் தனித்துவமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
