ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க மத்திய அரசு முடிவு

285

விபத்து கால நெருக்கடியின்போது துரிதமாக செயல்படுவதற்கு வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பேசிய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா,  சமீபத்தில் கேதார்நாத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து துரதிர்ஷ்டவசமானது என்றும், இதுபோன்ற சம்பவங்களின்போது உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறினார்.

அந்தவகையில் நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 780 மாவட்ட ஆட்சியர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். இதைப்போல நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 200 அல்லது 300 கி.மீ. தொலைவிலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கும் திட்டம்  இருப்பதாகவும்,  இது தொடர்பாக மத்திய போக்குவரத்து அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.