உலகம் பருவநிலை மாறுபாட்டால் பெரும் மாற்றத்துக்குள்ளாகி வருகிறது. இயற்கையின் நிலைமை இப்போது வழக்கம் போல இல்லை. வானிலை தாறுமாறாக மாறுகிறது. பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் வருங்காலத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்கள் இன்னும் தீவிரமாக இருக்கும்.
இந்நிலையில் இமயமலையில் உள்ள முக்கியமான பனிப்பாறைகள், குறிப்பாக இந்துகுஷ் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பனிப்பாறைகள் சுமார் 200 கோடி மக்களுக்கு நீர் ஆதாரமாக இருக்கின்றன.
விஞ்ஞானிகளின் கணிப்பின்படி, உலக வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துவிட்டாலே, நூற்றாண்டின் இறுதியில் 75% பனிப்பாறைகள் இல்லாமல் போய்விடும். இது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்த பனிப்பாறைகள் உருகுவதால் குடிநீர், விவசாயம், மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கம் இந்தியா, சீனா, நேபாளம் போன்ற ஆசிய நாடுகளுக்கு மட்டும் அல்லாமல், ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலை, அமெரிக்கா, கனடா, ஐஸ்லாந்து போன்ற நாடுகளிலும் தெரியும்.
உலக வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியஸ் உயர்ந்துவிட்டால், பனிப்பாறைகளில் நான்கில் மூன்றுப் பங்கு உருகிவிடும் என்று கூறப்படுகிறது.
இந்த அச்சநிலையை கருத்தில் கொண்டு, தஜிகிஸ்தானில் உள்ள துஷன்பே நகரில் ஐ.நா. மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பனிப்பாறைகள் தொடர்பான முக்கிய விவாதங்கள், தீர்வுகள், மற்றும் செயல் திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது.
பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த, கார்பன் உமிழ்வை குறைக்கும் முயற்சி, சுத்தமான மின்சார உற்பத்தி, மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தில் கூறிய இலக்குகளை அடைவது போன்ற முக்கிய நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.
அதிக சவால்கள் எதிர்கொள்வதற்காக, சட்டங்களும் கடுமையாக இருக்க வேண்டும், விழிப்புணர்வும் அதிகமாக இருக்க வேண்டும். இல்லையெனில், வருங்காலத்தில் நம் தலைமுறைக்கு நீர் பஞ்சம் போன்ற பெரும் பாதிப்புகள் நேரிடும் என எச்சரிக்கப் படுகிறது.