இந்தியாவில் மக்களுக்கு அவசரத்தில் பண தேவைப்பட்டால் முதலில் அவர்கள் நினைப்பது தங்க நகை கடன் தான். வீட்டில் இருக்கும் நகையை வங்கியிலும் நிதி நிறுவனங்களிலும் வைத்து பணம் வாங்கி, பின் அதை மீட்டுக் கொள்வது தான் வழக்கமான நடைமுறை.
ஆனால், இந்த நகை கடன் முறையில் சில முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து ரிசர்வ் வங்கி, தங்க நகை கடன் கொள்கையில் கடுமையான மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டிருந்தது. இதனால், நகை கடன் கொடுக்கும் விதிமுறைகள் கடுமையாக்கப்பட இருந்தன.
இதில் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கவலை தெரிவித்துவந்த நிலையில் பொதுமக்களும் அதிகம் வேதனை தெரிவித்து வந்தனர் . விதிமுறைகள் கடுமையானால், கடன் வழங்குவதில் தாமதம் ஏற்படும், சாமானிய மக்களுக்கு சிரமம் ஏற்படும் நிலை இருந்தது.
இதைக் கருத்தில் கொண்டு, மத்திய நிதி அமைச்சகம், இந்த விதிமுறைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வழிகாட்டுதலின்படி, சிறு நகை கடன் வாங்குபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கொள்கையை மாற்ற வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி, புதிய விதிமுறைகளை உடனடியாக இல்லாமல், 2026 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து அமல்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் முக்கியமாக,
“2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக நகை கடன் பெறுகிறவர்களுக்கு, இந்த கடுமையான விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கலாம்”
என்றும் மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
இதன் மூலம், சாதாரண மக்களுக்கு விரைவாகவும் சிரமமில்லாமல் கடன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி, மத்திய அரசின் பரிந்துரைகளை பரிசீலித்து, பொதுமக்கள் உள்ளிட்ட அனைவர் கருத்துக்களையும் அடிப்படையாக வைத்து, தங்க நகை கடன் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வரும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.