எழுத்துக் காதலனுக்கு இன்று பிறந்தநாள்

307
Advertisement

“நம்முடைய புன்னகையில், நம்முடைய கண்ணீர் துளியில், நம்முடைய கனத்த மௌனத்தில் என்றுமே நம்முடன் இசை இருக்கிறது” என, அந்த இசைக்கு தனது எழுத்தால் உணர்வூட்டிய செருக்கு சற்றும் இல்லாமல் கூறியவர் நா.முத்துக்குமார்.

1975ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 12ஆம் தேதி காஞ்சிபுரத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் முத்துக்குமார்.

6 வயதிலேயே தாயை இழந்து, தமிழாசிரியரான தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த அவருடன் சேர்ந்து வாசிக்கும் ஆர்வமும் வளர்ந்தது. 

தந்தையின் புத்தக ஆர்வத்தை குறித்து பேசுகையில், “யாரேனும் ஒரு மூட்டை புத்தகம் தருகிறேன் என சொன்னால், என் அப்பா என்னை விற்றுவிடுவார்” என முத்துக்குமார், நேர்காணல் ஒன்றில் நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்.

இயக்குநராகும் ஆசையோடு சென்னை வந்தவர், சிறிது காலம் உதவி இயக்குநர், கதையாசிரியர் என தனது கலையை செலுத்தி வந்தாலும், அவருடைய எழுத்து இசையுடன் தான் பயணிக்க வேண்டும் என காலம் தீர்மானித்த பின், சீமானின் ‘வீரநடை’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார் முத்துக்குமார்.

41 வயதுக்குள்ளாக 1000க்கும் மேற்பட்ட பாடல்கள், இரண்டு தேசிய விருதுகள் மற்றும் 12 புத்தகங்கள் என மடை திறந்த வெள்ளமாக, தனக்குள் ஊற்றெடுத்து கொண்டே இருந்த படைப்பு சக்தியை, இறுதி மூச்சு வரை செதுக்கி கொண்டே இருந்த அற்புத கலைஞன் தான் நா.மு.

திரைப்படப்பாடல்களில் என்ன இருக்க போகிறது என கேட்பவர்களுக்கு, என்ன இருக்க முடியாது என கேட்பது போல தனது பாடல்களால் பதிலளித்த பாடலாசிரியர் அவர். காதல், சோகம், பிரிவு, வறுமை போன்ற ஆழமான உணர்வுகளுக்கு அர்த்தம் கற்று கொடுத்த ஆசிரியர்.

“கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய் தான் சேராதே, எத்தனை காதல், எத்தனை ஆசை, தடுமாறுதே, தடம் மாறுதே” என ஓரிரு வரிகளில் அவர் கொட்டும் உணர்ச்சிகளும், கலையின் அழகையும் ரசிக்க தான் முடியுமே தவிர விவரிப்பது கடினம்.

தனக்கு கிடைத்த தளத்தில், சமூக ஏற்றத்தாழ்வுகளையும் சிக்கல்களையும் சற்றாகிலும் கிளறி விடாமல் நா.முவின் பேனா நகர்ந்ததே இல்லை. நா.முவின் மிக பிரபலமான ‘தூர்’ கவிதையில், வேலைக்காரி திருடியதாய் நாம் நினைத்த வெள்ளி டம்ளர், கிணற்றை தூர் வாரும் போது  கிடைத்தது என லேசாக தெரியும் வரியில் அழுத்தமான செய்தியை சொல்லி செல்கிறார் கவிஞர்.

அங்காடி தெரு படத்தில், அவள் அப்படி ஒன்றும் அழகில்லை என துவங்கும் பாடலில், ஒரு பெண் எப்படி இருந்தால் அழகு என்ற சமூகப்பார்வையை ஒரு சில வரிகளில் உடைத்து தகர்த்து இருப்பார் நா.மு.

ஆனந்த யாழை, தந்தையின் தாலாட்டு, தெய்வங்கள் தோற்றே போகும் போன்ற பாடல்களினால் தந்தையின் பாசத்துக்கு வார்த்தைகளால் வடிவம் கொடுத்து அழகு பார்த்தவர் நா.மு.

இப்படி எழுதி கொண்டே போகலாம் எழுத்துக்களை காதலித்த அந்த ஒப்பற்ற கவிஞனை பற்றி. உணர்வாய், எழுத்தாய், இசையாய் நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் இன்று பிறந்தநாள் காணும் நா.முத்துக்குமார் என்னும் கலைஞனை வாழ்த்துக்களுடன் நினைவுகூறுவோம்.