நாளை நீட் தேர்வு… பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்…

எம்பிபிஎஸ், பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதையடுத்து புதுச்சேரி பிராந்தியத்தில் 9 தேர்வு மையங்களில் மொத்தம் 4,440 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் புதுச்சேரி பல்கலைக்கழகம் மையத்தில் 960 பேர் எழுதுகின்றனர். அதேபோல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 720 பேர், ஜிப்மர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 480 பேர், காலாப்பட்டு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 240 பேர், நவோதயா வித்யாலயாவில் 240 பேர் எழுதுகின்றனர். மேலும் சின்னத்தா அரசு பெண்கள் பள்ளி, திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் பள்ளி ஆகியவற்றில் தலா 480 பேர் தேர்வு எழுதுகின்றனர். பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் 360 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

நீட் தேர்வையொட்டி கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் அரை கை கொண்ட வெளிர் நிற ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும். முழுக்கை சட்டைகள், பெரிய பட்டன்கள், பேட்ஜ்கள் அல்லது அலங்கார வடிவங்கள் கொண்ட ஆடைகள் அனுமதிக்கப்படாது. ஷூ, நகைகள், கடிகாரம் உள்ளிட்ட எந்த ஆபரணங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் பைகள், தண்ணீர் பாட்டில்கள், உணவு பொருட்கள், எழுத்துப் பொருட்கள் உள்ளிட்ட எந்த பொருட்களும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாது. மத சார்ந்த ஆடைகள் அணிந்து வருவோர் கூடுதல் சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

பாதுகாப்பு நடவடிக்கையாக தேர்வு ஆவணங்கள் வங்கிகளின் ஸ்ட்ராங் ரூம்களில் பாதுகாக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. சுமார் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் போக்குவரத்து சீரமைப்பு, கண்காணிப்பு ரோந்து மற்றும் தேர்வு மைய பாதுகாப்பு ஆகியவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Related News

Latest News