மொபைலில் பீப் சத்தம்.. யாரும் பயப்பட வேண்டாம்.. பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்.!

புயல், வெள்ளம் போன்ற அவசர காலங்களில் மக்களுக்கு உடனடி எச்சரிக்கை வழங்கும் நோக்கில், நாடு முழுவதும் செல்போன்களுக்கு சிறப்பு குறுஞ்செய்தி அனுப்பும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா அரசு முன்னெடுத்து வரும் இந்த திட்டம், பேரிடர் நேரங்களில் தகவலை வேகமாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இந்த சோதனை முயற்சியை தொலைத்தொடர்புத் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து செயல்படுத்துகின்றன. சுனாமி, நிலநடுக்கம், பெருவெள்ளம், சூறாவளி போன்ற பேரிடர் சூழ்நிலைகளில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு துல்லியமான தகவல்களை உடனடியாக வழங்குவது இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த எச்சரிக்கை முறை ‘செல் பிராட்காஸ்டிங்’ (Cell Broadcast) எனப்படும் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட மொபைல் கோபுர எல்லைக்குள் உள்ள அனைத்து செல்போன்களுக்கும் ஒரே நேரத்தில் செய்தியை அனுப்பும் திறன் கொண்டது. முக்கியமாக, இந்த எச்சரிக்கை வரும் போது செல்போன் ‘சைலண்ட்’ நிலையில் இருந்தாலும் கூட, உரத்த அலாரம் ஒலியுடன் திரையில் தகவல் தோன்றும்.

இன்றைய தினம் நாடு முழுவதும் பலரின் மொபைல் போன்களுக்கு இந்த சோதனை செய்தி அனுப்பப்பட உள்ளது. திடீரென மொபைலில் அலாரம் ஒலி எழுவது பயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இது ஒரு சோதனை மட்டுமே என்றும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முயற்சி எதிர்கால பேரிடர் மேலாண்மையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News