தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பல மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து, பகல் நேரங்களில் வெளியே செல்வது கூட சிரமமாக மாறியுள்ளது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
மே 1 முதல் மே 7 வரை தமிழகத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. சில நாட்களில் சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலை நீடிக்கும்.
மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும், தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் வெளியில் செல்லும் மக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மே 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மழை தொடரும் வாய்ப்பு உள்ளது. அதேசமயம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39–40°C மற்றும் குறைந்தபட்சம் 29°C இருக்கும். அதிக ஈரப்பதம் காரணமாக மக்கள் அசௌகரியத்தை சந்திக்கக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
