இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு ஜூலை 23-ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
KVN புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான பிரச்சினையால் வெளியீடு தாமதமானது. இதற்கிடையில், படத்தின் முழு பதிப்பும் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக ‘ஜன நாயகன்’ இருக்கும் என்று கூறப்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிகுந்த அளவில் இருந்தது. ஆனால், தொடர்ந்து ஏற்பட்ட தாமதம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் மூலம் வெளியீட்டுக்கான அனைத்து தடைகளும் நீங்கியுள்ளன. இதையடுத்து, ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் ‘ஜன நாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
