பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடச் செல்லும் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடையில்லாச் சான்றிதழ், அதாவது என்.ஓ.சி (NOC) வழங்க, ஒரு வீரருக்கு தலா 25,000 டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 24 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிடிவாதம் பிடித்து வருகிறது.
இந்த அதிரடி நிபந்தனையால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்க கிரிக்கெட் கிளப் உரிமையாளர்கள், இது நியாயமான கட்டணம் அல்ல, இது ஒரு வகையான ‘பணப்பறிப்பு’ (Extortion) என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதன் விளைவாக, வரும் காலங்களில் பாகிஸ்தான் வீரர்களைத் தங்கள் அணிகளில் ஒப்பந்தம் செய்ய வேண்டாமென்ற ஒரு அறிவிக்கப்படாத தடையை விதிக்கவும் மேஜர் லீக் கிரிக்கெட் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
வழக்கமாக ஐபிஎல் போன்ற தொடர்களில், வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்யும் போது, அந்த வீரர்களின் தாய் நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு ஒப்பந்தத் தொகையில் 10 முதல் 20 சதவீதத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கும்.
ஆனால், மேஜர் லீக் கிரிக்கெட்டில் அப்படி ஒரு அதிகாரப்பூர்வ கொள்கை இல்லாத நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மட்டும் அடம் பிடிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஒரு வீரரை ஒப்பந்தம் செய்து முடித்த பிறகு, கடைசி நேரத்தில் இது போன்ற பெரிய தொகையைக் கேட்பது முறையற்றது என்று அணி உரிமையாளர்கள் வாதிடுகின்றனர்.
இந்த சீசனில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்காக விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் ஒருவருக்கு மட்டுமே, அந்த அணி 24 லட்சம் ரூபாயைச் செலுத்தி அனுமதி வாங்கியுள்ளது. இதனால் அந்தத் தொடரில் விளையாடும் ஒரே பாகிஸ்தான் வீரராக ஹாரிஸ் ராவுஃப் மட்டுமே தற்போது உள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியிடம் அமெரிக்க அணி உரிமையாளர்கள் நேரில் முறையிட்டும், அவர் தனது முடிவில் பின்வாங்க மறுத்துவிட்டார்.
இந்தக் கட்டணத்தைக் கேட்கத் தங்களுக்கு முழு உரிமை இருப்பதாக அவர் வாதிடுவது, அணி உரிமையாளர்களை இன்னும் எரிச்சலடையச் செய்துள்ளது.
ஒருமுறை பணம் செலுத்தி அனுமதி வாங்கினாலும், மீண்டும் அந்த அனுமதியைப் புதுப்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அப்போதும் பாகிஸ்தான் வாரியம் புதிய தொகையைக் கேட்க வாய்ப்புள்ளதால், வீரர்களின் பாதுகாப்பில் ஒரு நிலையற்ற தன்மை நிலவுகிறது.
இந்தத் தெளிவற்ற கொள்கையால் பாகிஸ்தான் வீரர்களின் சர்வதேச வாய்ப்புகள் மற்றும் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த ‘வசூல்’ வேட்டை, உலக கிரிக்கெட் அரங்கில் அந்த நாட்டு வீரர்களுக்கான கதவுகளை மூடும் நிலையை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே இந்திய ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்படும் நிலையில், இப்போது அமெரிக்கத் தொடரிலும் இது போன்ற சிக்கல்கள் எழுவது அந்த நாட்டு வீரர்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
முறையான கொள்கை அறிவிப்பு இல்லாமல், தன்னிச்சையாகக் கட்டணம் வசூலிக்கும் பாகிஸ்தான் வாரியத்தின் இந்தச் செயல், அந்த நாட்டு கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் என்று விளையாட்டு விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
பாகிஸ்தான் வாரியத்தின் இந்தப் பிடிவாதம் தொடர்ந்தால், எதிர்காலத்தில் உலகத் தரம் வாய்ந்த பல தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களைப் பார்க்க முடியாத ஒரு துரதிர்ஷ்டவசமான சூழல் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.
