கொடைக்கானலில் 2 நாள் இலவச சுற்றுலா: பயணிகளுக்கு சூப்பர் வாய்ப்பு…முழு விவரம்…

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்களுக்கு தற்போது சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது. மே 2 மற்றும் மே 3 ஆகிய இரண்டு நாட்களுக்கு, கொடைக்கானல் பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் அனைத்தும் இலவசமாக திறக்கப்பட்டுள்ளன. வழக்கமாக கட்டணம் வசூலிக்கப்படும் பல பிரபல இடங்களை இந்த இரண்டு நாட்களில் எந்தச் செலவுமின்றி பார்வையிடலாம் என்பதால், இது சுற்றுலா பயணிகளுக்கு பெரிய சலுகையாக கருதப்படுகிறது.

இந்த சலுகையில் தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள் மற்றும் மோயர் சதுக்கம் போன்ற இயற்கை அழகுக்குப் பெயர் பெற்ற இடங்கள் அடங்கும். கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் அதிகம் விரும்பும் மலைநகரங்களில் ஒன்றான கோடைக்கானல், அதன் குளிர்ந்த காலநிலை மற்றும் பசுமை சூழலால் பயணிகளை எப்போதும் கவர்ந்து வருகிறது.

சமீபத்தில் அறிமுகமான ‘க்யூஆர் கோடு’ மூலம் ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்கும் முறையால் சில சிக்கல்கள் ஏற்பட்டன. குறிப்பாக பசுமை பள்ளத்தாக்கு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையை கருத்தில் கொண்டு, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக இரண்டு நாட்களுக்கு கட்டணத்தை முழுமையாக ரத்து செய்துள்ளது. இதனால் பயணிகள் எளிதாக சுற்றுலா இடங்களை பார்வையிட முடியும்.

மேலும் வசதிக்காக பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் நேரடி டிக்கெட் வழங்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மே 4 முதல் புதுப்பிக்கப்பட்ட ‘க்யூஆர் கோடு’ முறை மீண்டும் அமலுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News