அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் என்றாலே எப்பொழுதும் ஒரு அதிரடி, சர்ச்சை மற்றும் முன்கோபத்திற்குக் குறைவிருக்காது. அப்படிப்பட்ட ஒரு உச்சக்கட்ட மோதல் சம்பவம் தற்போது அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.
அடுத்த வாரம் அமெரிக்க இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தன்னுடைய கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாடு முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் ட்ரம்ப். இந்தத் தொடர் பயணங்களால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதாக வதந்திகள் பரவி வந்தன.
இந்தச் சூழ்நிலையில், அமெரிக்காவின் கன்சாஸ் மற்றும் அயோவா மாகாணங்களில் அவர் பங்கேற்க இருந்த இரண்டு மாபெரும் பிரச்சாரக் கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து ஒரு பத்திரிகையாளர் கேட்ட சாதாரண கேள்விக்கு, ட்ரம்ப் பொதுவெளியில் ஆக்ரோஷமாகப் பதிலளித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் ராணுவத் தளத்திற்கு அதிபர் ட்ரம்ப் வந்தபோது, அவரிடம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
“தொடர் பிரச்சாரங்களால் உங்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதா? அதனால்தான் கன்சாஸ் பிரச்சாரத்தை ரத்து செய்தீர்களா?” என்று அவர் கேட்டவுடன், ட்ரம்புக்குக் கோபம் உச்சிக்கு ஏறியது.
“இப்படிப்பட்ட ஒரு கேவலமான கேள்வியைக் கேட்கும் நீங்கள்தான் ஒரு நோயாளி! ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஒரு மிக மோசமான நிறுவனம்” என்று ட்ரம்ப் ஆவேசமாகத் திட்டினார்.
நான் உங்களின் உடல்நலம் குறித்து அக்கறையோடுதான் கேட்டேன் என்று அந்த நிருபர் விளக்கமளிக்க முற்பட்டபோது, அடுத்ததாக ட்ரம்ப் செய்த காரியம்தான் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த நிருபரின் உருவத்தைக் கேலி செய்யும் விதமாக, “முதலில் இவனைப் பாருங்கள்… இவன் உடம்பை எந்த ஷேப்பில் வைத்திருக்கிறான்! இவன் பார்ப்பதற்கே ஒரு நரகத்தைப் போல அருவருப்பாக இருக்கிறான்.
முதலில் போய் உன் உடம்பைக் குறை” என்று பொதுவெளியில் அந்த நிருபரின் உடல் அமைப்பை ட்ரம்ப் மிகக் கேவலமாகக் கிண்டலடித்துள்ளார்.
அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடர்ந்து இருபத்தி ஐந்து பிரச்சாரங்களை முடித்துள்ள ட்ரம்ப், தனது குரல்வளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை ஒரு பிரச்சார மேடையிலேயே வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருந்தார்.
இதனால்தான் அந்த நிருபர் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டார். ஆனால், தேர்தல் நெருங்கும் வேளையில், தமக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தி எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக மாறிவிடும் என்ற கோபத்திலேயே, அந்த நிருபரை ட்ரம்ப் இப்படிப் பொதுவெளியில் வறுத்தெடுத்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
