ஹோம் லோன் ஒரு நீண்ட கால கடன் என்பது நமக்கு தெரிந்த விஷயம். இன்று பெரும்பாலானவர்கள் தங்களது கனவு வீடு ஒன்றை வாங்க ஹோம் லோனை நம்பிக்கையுடன் பெறுகிறார்கள். ஆனால், வங்கிகள் இந்தக் கடனை வழங்கும் முன் சில முக்கியமான விஷயங்களை அலசி ஆராயும். அதனிலேயே, முதன்மையாக பார்க்கப்படும் ஒன்று – சிபில் ஸ்கோர்.
இந்த சிபில் ஸ்கோரை வைத்து வங்கிகள் உங்கள் கடனை திருப்பிச் செலுத்தும் திறனை மதிப்பீடு செய்கின்றன. நீங்கள் ஏற்கனவே எடுத்த கடன்களை சரியாக செலுத்தியிருக்கிறீர்களா? தவணைகளை தவறவிட்டீர்களா? கடைசியாக எந்த கடனை அடைத்தீர்கள்? – இவை அனைத்தும் இதில் பதிவு செய்யப்படும். இந்த தகவல்களின் அடிப்படையில்தான் வங்கிகள் உங்களுக்கு கடன் வழங்க தகுதி உள்ளதா என்பதை முடிவு செய்கின்றன.
இதற்குப் பிறகு வரும் முக்கியமான விஷயம் – உங்கள் வருமானம். அதாவது, நீங்கள் மாதம் சம்பாதிக்கிற தொகையும், அந்த வருமானம் எவ்வளவு நிலையாக இருக்கிறது என்பதும் கவனிக்கப்படும். வங்கிகள் நிகர வருமானத்தை வைத்து தான் கணக்கிடும். அதாவது, உங்கள் சம்பளத்தில் இருந்து வருமான வரி, முதலீடுகள், காப்பீடு போன்றவற்றை கழித்தபிறகு உங்களிடம் உண்மையில் எவ்வளவு பணம் உள்ளது என்பதே கணக்கில் எடுக்கப்படும்.
இதையும் தவிர, உங்கள் வருமானத்தின் நிலைத்தன்மையும் முக்கியமான ஒன்று. நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தில் முழு நேர ஊழியராக இருக்கிறீர்களா? அல்லது தொழில்நுட்ப ஆலோசகர் போன்ற நிரந்தர பணியில் இருக்கிறீர்களா? என்பதைவைத்து வங்கிகள் உங்கள் வருமானம் எதிர்காலத்திலும் தொடரும் என நம்பும்.
இதற்குப் பிறகு வங்கிகள் பயன்படுத்தும் கணக்கீடு – மல்டிபிளேயர் விதி. இதனடிப்படையில், உங்கள் ஆண்டு வருமானத்தை 4 முதல் 5 மடங்கு வரை வைத்து வங்கி உங்களுக்குக் கடன் அளிக்கும். உதாரணமாக, உங்கள் மாத சம்பளம் ரூ.1 லட்சம் என்றால், ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம். அதனால், வங்கி உங்களுக்கு ரூ.50 லட்சம் வரை ஹோம் லோன் வழங்கும்.
இதனால், ஒரு ஹோம் லோன் எவ்வளவு தொகைக்கு கிடைக்கும் என்பதை நம்மால் வீட்டிலிருந்தே கணக்கிட முடியும். ஒரு நல்ல சிபில் ஸ்கோர், நிலையான வருமானம் இருந்தால் உங்கள் கனவு வீடு இன்று உங்கள் சொந்தமாக மாறும்!