முதலமைச்சரின் காலில் விழுந்த கலெக்டர்கள்

252
Advertisement

ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் சக ஐஏஎஸ் அதிகாரி,
இதர அதிகாரிகள் முன்னிலையில், தங்களின் முதுகை
வளைத்துக் குனிந்து முதலமைச்சரின் இரு பாதங்களையும்
தொட்டுவணங்கிய சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

அகில இந்தியப் பணி அதிகாரிகள் இந்தியா முழுவதும்
சென்று பணியாற்றக்கூடியவர்கள். இந்தியாவின் வளர்ச்சிக்
கான திட்டங்களைத் தீட்டுபவர்களே இந்த ஐஏஎஸ் அதிகாரிகள்
தான்..

நாட்டின் வளர்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரிகளின் பங்களிப்புதான்
முதன்மையானது. அதுமட்டுமல்ல, முதலமைச்சர், அமைச்சர்கள்
போன்றோருக்கு அரசு நிகழ்ச்சிகளில் பேசவேண்டிய உரைகளைத்
தயாரித்துக்கொடுப்பவர்களும் ஐஏஎஸ் அதிகாரிகள்தான்.

Advertisement

எந்தத் துறையில் பணியாற்றினாலும் அவர்களுக்கு கிடைக்கும்
மரியாதையே தனிதான். அதனால் யார் தயவும் அவர்களுக்குத்
தேவையில்லை. ஆனால், சில ஐஏஎஸ் அதிகாரிகள் அரசியல்
வாதிகளின் தயவைப் பெறுவதற்காகத் தங்களின் சுயமரியாதையை
அடமானம் வைத்துக் காலில் விழுந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகளின் இந்தச் செயல் ஆட்சிப் பணியிலுள்ளோரின்
கௌரவத்தையும் குறைத்துள்ளது.

தெலுங்கானா மாநிலம், சித்திப்பேட்டை மாவட்டத்தில் புதிதாகக்
கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டிருந்தது. இக்கட்டடத் திறப்பு விழாவுக்காக
அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அங்கு வந்திருந்தார்.

புதிய கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்ததும், யாரும் எதிர்பாராத
விதமாக அம்மாவட்ட கலெக்டர் வெங்கட்ராம் ரெட்டி, முதலமைச்சர்
சந்திரசேகர ராவ் பாதங்களைத் தொட்டு வணங்கினார். கலெக்டரின்
இந்தச் செயலைப் பார்த்து அங்கிருந்தோர் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது மாநிலத் தலைமைச் செயலர் உள்பட பல அதிகாரிகள் அங்கிருந்தனர்.
இந்த சர்ச்சை அடங்கும் முன்பே கமரெட்டி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தைத் திறந்து வைத்த சந்திரசேகர ராவ்
பாதங்களை கலெக்டர் சரத் தொட்டு வணங்கியுள்ளார்.

இந்த இரண்டு கலெக்டர்களின் செயல்களும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
உடனே சுதாரித்துக்கொண்ட சித்திப்பேட்டை மாவட்ட கலெக்டர் வெங்கட்ராம் ரெட்டி,
”முதலமைச்சர் என் தந்தையைப் போன்றவர். விஷேச நாட்களில் பெரியவர்களிடம்
ஆசிபெறுவது நமது கலாச்சாரம். எனவே, புது அலுவலகத்தில் பொறுப்பேற்கும்முன்
அவரிடம் ஆசிபெற்றேன்” என்று தனது செயலுக்கு விளக்கமளித்துள்ளார்.

என்றாலும், ஐஏஎஸ் அதிகாரிகளின் இந்தச் செயல் குடியுரிமைப் பணிமீதான
கண்ணியதைக் குறைப்பதாகவே அமைந்துள்ளது