போர் என்றால் இப்போது வெறும் துப்பாக்கிகளும் ஏவுகணைகளும் மட்டுமல்ல, ஒரு கணினித் திரையின் பின்னால் இருந்தும் ஒரு நாட்டைச் சீர்குலைக்க முடியும் என்பதை ஈரான் இப்போது உலகிற்கு நிரூபித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் ஒருபுறம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் நாட்டைச் சேர்ந்த ஹேக்கர்கள் ஒரு நூதனமான ‘சைபர் போரைத்’ தொடங்கியிருப்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவின் விமானத் துறை மென்பொருள் பொறியாளர்களைக் குறிவைத்து, ஒரு மிகப்பெரிய வலை விரித்துள்ளனர் ஈரானிய ஹேக்கர்கள். இதற்காக அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் என்ன தெரியுமா? ‘போலி வேலைவாய்ப்பு அழைப்புகள்’. ஆமாம், முன்னணி அமெரிக்க விமான நிறுவனங்களின் பெயரில், ஒரு சீனியர் சாஃப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேவை என மிக நேர்த்தியாக விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இந்த விளம்பரங்கள் அனைத்தும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் அதாவது AI-ஐப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளன.
வேலை தேடும் பொறியாளர்கள் இவர்களைத் தொடர்பு கொள்ளும்போது, வீடியோ காலில் பேசுவதற்காக ஒரு குறிப்பிட்ட மென்பொருளைத் தரவிறக்கம் செய்யச் சொல்கிறார்கள். அந்தச் செயலிக்குள் ஒளித்து வைக்கப்பட்டுள்ள மர்மமான வைரஸ், அந்தப் பொறியாளரின் கணினியில் உள்ள ஒட்டுமொத்த ரகசியத் தரவுகளையும் திருடி ஈரானுக்கு அனுப்பிவிடுகிறது. இதன் மூலம் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் விமானப் போக்குவரத்துகள் மற்றும் ரகசியத் திட்டங்களைக் கண்காணிக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
விமானத் துறை மட்டுமல்லாமல், அமெரிக்காவின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. அமெரிக்காவில் உள்ள பல பெட்ரோல் நிலையங்களில் இருக்கும் தானியங்கி டேங்க் அளவீட்டு கருவிகள் மிகக் குறைந்த பாதுகாப்புடன் இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு, எரிபொருள் அளவை மாற்றுவது போன்ற நாசவேலைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் ஈரானின் சைபர் தலைமையகத்தை இஸ்ரேல் தாக்கி அழித்த போதிலும், இந்த ஹேக்கர்களின் வேகம் ஒரு துளிகூடக் குறையவில்லை. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் எனப் பல நாடுகளின் உள்கட்டமைப்பைச் சிதைக்க ஈரான் இந்த சைபர் போரை ஒரு வலிமையான ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. எதிர்காலப் போர்கள் இரத்தக் களரி இல்லாமல், டேட்டாக்கள் மூலமே தீர்மானிக்கப்படும் என்பதை இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
